உ.பி. தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ராஜஸ்தான் மனோஹர்பூரில் மின்கம்பியில் உரசி தீ விபத்து
ஜெய்ப்பூர்: உத்திரப்பிரேதம் மாநிலத்தில் இருந்து ராஜஸ்தான் மாநிலத்தின் மனோஹர்பூர் எல்லையில் உள்ள ஒரு செங்கல் தொழிற்சாலைக்கு பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் புறப்பட்டுள்ளனர். வேலைக்கு தேவையான பொருட்களை பேருந்தின் மேல் வைத்து கொண்டு பயணித்துள்ளனர். இந்த பேருந்து ராஜஸ்தான் மாநிலம் மனோஹர்பூர் காவல்நிலையத்திற்கு அருகில் வரும் போது 11,000 வோல்ட் உயர் மின் அழுத்த கம்பிகள் உரசியதில் மின்சாரம் தாக்கி பேருந்து தீப்பிடித்தது.
இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 12 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். பேருந்தின் மீது பொருட்கள் ஏற்றியது தொடர்பாகவும், பேருந்திற்கு முறையான ஆவணங்கள் உள்ளதா என்பது தொடர்பாகவும் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களுக்கு அம்மாநில முதல்வர் இரங்கல் தெரிவித்துள்ளார்.