தளராத மன உறுதியே வெற்றியை வசப்படுத்தும்
ஏறக்குறைய எல்லா மனிதர்களுமே தங்களைப் பற்றி குறைத்துதான் எண்ணிக் கொள்கிறார்கள். தங்கள் மூளையை, மனோ சக்தியை, தங்கள் ஆற்றலைப் பற்றி குறைவாகவே மதிப்பீடு செய்கிறார்கள். அவர்கள் துணிந்தால் எதையும் செய்து முடிக்க முடியும் என்பதைப் பற்றி நினைப்பதே இல்லை என்று சொல்கிறார் அறிஞர் ஹெர்பட் என் கேசன்.
அர்ஜென்டினா நாட்டைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கால்பந்தாட்ட வீரரான மரடோனா வறுமையான குடும்பத்தில் பிறந்தவர். நாம் குள்ளமாக இருக்கின்றோமே என்ற தாழ்வு மனப்பான்மை அவருக்குச் சிறுவயதில் இருந்ததாம். அதே தாழ்வு மனப்பான்மையோடு அவர் முடங்கிப் போயிருந்தால் உலகமே பாராட்டும் அளவுக்கு அவரால் வெற்றி பெற்றிருக்க முடியுமா?
சிறுவயதில் உறவினர்களும், சுற்றத்தாரும் ‘சின்ன வெங்காயம்’ என்று கேலி செய்யப்பட்ட மரடோனா தான் 1986ஆம் ஆண்டு ஜெர்மனியில் நடந்த உலக கால்பந்து இறுதிப்போட்டியில் அபாரமாக விளையாடி அர்ஜென்டினா நாட்டிற்கு கோப்பை பெற்றுத் தந்தார். பிறர் கேலி பேசுகின்றார்களே என்று அஞ்சி நடுங்கித் தாழ்வு மனப்பான்மைக்குள் சிக்கியிருந்தால் அவரால் இந்தச் சாதனையைச் செய்திருக்க முடியுமா? அதனால் எந்த நிலையிலும் பிறரைக் கேலியும், கிண்டலும் செய்வதைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும்.
கொலம்பஸ் தன் கடற்படையுடன் கடற்பயணத்தைத் தொடங்கியபோது உலகம் தட்டையானது என்று நம்பிய அக்கால மனிதர்கள் அவரை எச்சரிக்கை செய்தார்கள்.அவர் தொடர்ந்து கடல் பிரயாணம் செய்தால் பூமியின் எல்லைக்கு அப்பால் உள்ள சூனியத்திற்குள் தலைக்குப்புற விழுந்து விடுவார் என்று பயமுறுத்தியும் பார்த்தார்கள். இருப்பினும் அவர் தளராத மனத்தோடும், தன்னம்பிக்கையுடன் தன் கடல் பயணத்தைத் தொடர்ந்தார். அதனால்தான் அவரால் ஒரு புதிய நாட்டைக் கண்டுபிடிக்க முடிந்தது. தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்தெறிய நாமும் மேற்கொள்ள வேண்டியது தளராத தன்னம்பிக்கையைதான். இதற்கு உதாரணமாக கனவுகளை விரி வடையச் செய்து வெற்றிவானில் பறந்த சாதனை மனிதர் ஒருவரை பற்றி நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். தன்னுடைய உயரம் காரணமாகவும், நிற, இன, உடலமைப்பால் தொடர்ந்து மற்றவர்களால் உருவக்கேலிக்கு ஆளானவர் டெம்பா பவுமா. அதையெல்லாம் உடைத்து இன்று வரலாற்றுச் சாதனை படைத்திருக்கிறார்.
27 ஆண்டுகளுக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்று வரலாறு படைத்திருக்கிறது தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட்டுகளில் தோற்கடித்துள்ளது.இந்த சாதனைக்கு காரணமாகப் புகழப்படுபவர் கேப்டன் டெம்பா பவுமா. யார் இவர் என்பது குறித்துப் பார்ப்போம்.
‘பவுமா மிகச்சிறப்பான கிரிக்கெட் கேப்டன். அவரைப் பற்றி மற்றவர்கள் புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்’ இவ்வாறு பவுமாவைப் புகழ்ந்தவர் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் குயின்டன் டி காக். அவர் எந்த சமயத்தில் அப்படிச் சொன்னார் என்பது முக்கியமானது. 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பையின்போது ‘Black lives Matter’ எனப்படும் இனப்பிரிவினை விவகாரம் உலகம் முழுவதும் பற்றி எரிந்துகொண்டிருந்தது. அதன் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் மண்டியிட்டு வீரர்கள் ஆதரவு தெரிவித்தார்கள். அதன்படி தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கமும் தனது அணி வீரர்களுக்கு இதனை கட்டாயமாக்கியது. அப்போதைய கேப்டன் குயின்டன் டி காக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மண்டியிட மறுத்தார். தொடர்ந்து கேப்டன் பதவியிலிருந்தும் அவர் விலகினார். அப்போதுதான் பவுமா டி20 கேப்டனாக தலைமையேற்றார். இந்த சர்ச்சையை மிகவும் நிதானமாக அணுகிய பவுமா பிரச்னையை முடிவுக்குக் கொண்டு வந்ததோடு, டி காக்கை மீண்டும் அணிக்குள் கொண்டுவந்தார். இதில் பவுமாவின் தலைமைப் பண்பும் பெரிதும் பாராட்டப்பட்டது.
அவரது தலைமைப் பண்புக்கான அங்கீகாரமாக அடுத்து ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார் பவுமா. அன்றிலிருந்து தென்னாப்பிரிக்கா அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட்டு வலுவான அணியை உருவாக்கி காட்டினார். 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை. அந்த உலகக்கோப்பைக்கு பிறகு தென்னாப்பிரிக்கா அணி பெரிய அளவில் மாற்றங்களுக்கு உட்பட்டது. புதிய அணியை உருவாக்கும் பெரிய சவால் தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்துக்கும், கேப்டனுக்கும் இருந்தது. இந்த சவாலைச் சரியாக செய்து முடித்துள்ளார் கேப்டன் பவுமா.
தென்னாப்பிரிக்கா அணியில் பூர்வக்குடி கறுப்பினத்தவர்களுக்கு இட ஒதுக்கீடு அடிப்படையில் கறுப்பினத்தைச் சேர்ந்தவர் கேப்டனாக வேண்டும் என்ற விதி கொண்டுவரப்பட்டது. அதற்காகவும், தன்னுடைய உயரம் காரணமாகவும், நிற, இன, உடலமைப்பால் தொடர்ந்து ட்ரால் செய்யப்பட்டவர் பவுமா. அதையெல்லாம் உடைத்து இன்று வரலாறு படைத்திருக்கிறார். அதற்கு காரணம் தன் மீதான இப்படியான விமர்சனங்கள் குறித்து கண்டுகொள்ளாமல் தொடர்ந்து கேப்டன்ஷிப்பில் கவனம் செலுத்தியது தான்.
தென்னாப்பிரிக்கா அணியை பொறுத்தவரை, கடந்த 2 ஆண்டுகளில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை மட்டுமே அந்த அணி வென்றிருந்தது. ஆனால், டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் னாப்பிரிக்கா அணி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
தென்னாப்பிரிக்கா அணி 1998 நாக்அவுட் சாம்பியன் பட்டத்தைத் தவிர வேறு எந்த ஐசிசி பட்டத்தையும் 27 ஆண்டுகளாக வென்றதில்லை. இன்று அந்த ஏக்கம் முடிவுக்கு வந்துள்ளது. அதனை நிகழ்த்தி காட்டியதில் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் பங்கு முக்கியமானது. 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அடித்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பெற்றார் பவுமா. அதன் பின்பு, ஏழு வருடங்கள் கழித்து 2023 மார்ச் மாதம் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பவுமா அடித்தார். தனது பேட்டிங் குறித்த விமர்சனங்களையும் எதிர்கொண்டே வந்திருக்கிறார்.
2023 உலகக்கோப்பையில், தென்னாப்பிரிக்கா அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய நிலையில் மீண்டும் அவர் விமர்சனத்திற்கு ஆளானார். ஆனால், இன்று அந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் 27 ஆண்டுகால கனவை நனவாக்கியிருக்கிறார் பவுமா. அவரது வெற்றியை உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
உருவக் கேலிகள், அவமானங்கள் என பல சவால்களை எல்லாம் கடந்து தான் பவுமா இந்த உயரத்தை அடைந்திருக்கின்றார். இன்று உலகமே அவரை பாராட்டுகின்றது. உயரம் குறைவாக இருந்தபோதும் சாதிக்க வேண்டும் என்ற கனவும் தளராத மன உறுதியும் இருந்ததால் தான் பவுமா வெற்றியை வசப்படுத்தி உள்ளார் என்பதில் ஐயமில்லை.