புரியாத புதிர்
மாநிலங்களவை தலைவராக இருந்த தன்கர், எதிர்க்கட்சி எம்பிக்களுடன் தொடர் மோதலில் ஈடுபட்டார். அதனால் அதிருப்தி அடைந்த எம்பிக்கள் தன்கருக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த அளவுக்கு அரசுக்கு ஆதரவான நிலையில் இருப்பவர். அரசின் ஒவ்வொரு நடவடிக்கைகளையும் எதிர்க்கட்சி எம்பிக்கள் விமர்சிக்கும் போது, ஆளும்கட்சியை முந்திக்கொண்டு பதில் அளிப்பவர். ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஆர்.என்.ரவியால் நிறுத்தி வைத்திருந்த மசோதாக்களுக்கு உச்ச நீதிமன்றம் நேரடி அனுமதி கொடுத்ததுடன், மாநில சட்டப்பேரவைகளில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதி ஒப்புதல் அளிக்க காலக்கெடு நிர்ணயித்து உச்ச நீதிமன்றம் அளித்த வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை தன்கர் வெளிப்படையாக விமர்சனம் செய்தது ஆளும்கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
அடுத்ததாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த யஷ்வந்த் வர்மா வீட்டில் பணம் சிக்கியதும், அவர் மீது எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த பதவி நீக்க தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதுடன், இதுதொடர்பாக தேவையான நடவடிக்கை எடுக்க மாநிலங்களவை செயலருக்கு தன்கர் உத்தரவிட்டதும் அவரது பதவி விலகலுக்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்ற யூகம் டெல்லி அரசியலில் பேசப்படுகிறது. எதிர்க்கட்சியின் அறிவிப்பை உடனே ஏற்றுக்கொண்டதன் மூலம், நீதித்துறை ஊழல் தொடர்பான விவகாரத்தில் ஒன்றிய அரசின் திட்டத்தை மீறி தன்கர் நடந்திருப்பதாகவும், அதனால் ஆட்சி மேலிடம் அதிருப்தி அடைந்ததன் விளைவாக அதிரடியாக ராஜினாமா செய்யச்சொல்லி தன்கருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏனெனில் தன்கருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது பதவி விலக தன்கர் விரும்பினார். ஆனால் ஆளும்கட்சி அனுமதிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கடந்த 10 நாட்களுக்கு முன்பு கூட 2027 ஆகஸ்ட் வரை பதவியில் இருந்து விட்டு, சரியான நேரத்தில் விலகிவிடுவேன் என்று தன்கர் கூறினார். அதாவது முழுப்பதவிக்காலமும் நீடிக்கும் யோசனை அவரிடம் இருந்தது. ஆனால் மாநிலங்களவை தொடங்கிய முதல் நாளில் முழுமையாக அவை நடவடிக்கையில் பங்கேற்ற தன்கர் இரவில் திடீரென ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டது அனைவருக்கும் மிகப்பெரிய அதிர்ச்சி. அதை விட முக்கியமாக அவரது ராஜினாமா நேற்று ஏற்றுக்கொள்ளப்பட்டது இன்னொரு அதிர்ச்சி.
அதனால் தான் தன்கர் ராஜினாமாவை எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. நேற்று
முன்தினம் மாலை 4.30 மணிக்கு நடைபெற்ற அலுவல் ஆலோசனைக் குழு கூட்டத்தில் ஒன்றிய அமைச்சர்கள் ஜே.பி. நட்டா மற்றும் கிரண் ரிஜிஜு ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. அதுபற்றி தன்கருக்கு தகவலும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதே போல் மாநிலங்களவையில் ஜே.பி.நட்டா பேசும் போது,’நான் சொல்வது மட்டுமே பதிவு செய்யப்படும்’ என்றார். இந்தக் கருத்து அவை தலைவரை அவமதிப்பதாக சிலர் கூறினர். இதனாலும் தன்கர் வருத்தம் அடைந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் ஏன் ராஜினாமா என்பது இதுவரை புரியாத புதிர்.
