விற்கப்படாத சரக்குகளின் திருத்தப்பட்ட விலையை அறிவிக்க வேண்டும்: உற்பத்தியாளர்களுக்கு அரசு உத்தரவு
புதுடெல்லி: பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு வருகிற 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. இந்நிலையில் விற்கப்படாத சரக்குகளின் விலையை மாற்றியமைக்கும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘புதிய ஜிஎஸ்டி விகிதங்களின்படி உற்பத்தியாளர்கள், வியாபாரத்திற்காக பொருட்களை பெட்டிகளில் அடைப்பவர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் 2025ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி வரை அல்லது (கையிருப்பு நீடிக்கும் வரை) விற்கப்படாத சரக்குகளின் அதிகபட்ச சில்லறை விலையை மாற்றியமைக்கலாம். இந்த உத்தரவின்படி புதிய அதிகபட்ச சில்லறை விலை ஸ்டிக்கர், முத்திரை மூலம் அறிவிக்கப்பட வேண்டும். விளம்பரங்கள் மூலம் நுகர்வோருக்கு நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.