திட்டமிடாத விதிகளால் பெரும் குழப்பம்; 5வது நாளாக விமான சேவை முடக்கம்: நாடு முழுவதும் ஏர்போர்ட்களில் தவிக்கும் பயணிகள்: பொறுப்பை தட்டிக் கழிக்கும் ஒன்றிய அரசு
புதுடெல்லி: ஒன்றிய அரசு எவ்வித முன்னறிவிப்பும் இன்றி, அவசர கதியில் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை அமல்படுத்தியதால், 5வது நாளாக இண்டிகோ விமான சேவை முடங்கி நாடு முழுவதும் விமான பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்த சிக்கலுக்கு தீர்வு காண்பதற்கு பதிலாக ஒன்றிய அரசு தனது பொறுப்பை தட்டிக் கழித்துள்ளது.
விமானிகளுக்கு போதிய ஓய்வு வழங்கும் வகையிலும், விமானங்களின் பாதுகாப்பு கருதியும் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறைகளை ஒன்றிய அரசு கடந்த நவம்பர் 1ம் தேதி அமல்படுத்தியது. ஆனால் இது குறித்து எந்த முன்னறிவிப்பும் இன்றி, திடீரென புதிய விதிமுறை அமல்படுத்தப்பட்டதால், நாட்டின் மிக அதிக விமானங்களை இயக்கும் ஏர்லைன்சான இண்டிகோ தடுமாறத் தொடங்கியது.
விமானிகள், விமான பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இண்டிகோ விமான நிறுவனம் கடந்த மாதத்தில் இருந்தே பல விமானங்களை ரத்து செய்து வந்தது. இது கடந்த 2ம் தேதி உச்சகட்டத்தை எட்டத் தொடங்கியது. கடந்த புதன் கிழமை 200க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்தான நிலையில், வியாழக்கிழமை 550, வெள்ளிக்கிழமை 1000 என ரத்தாகும் விமானங்கள் எண்ணிக்கை அதிகரித்தது.
இதனால், இதனால் சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் விமான பயணிகள் பெரும் சிரமத்தை சந்தித்தனர். பல வெளிநாட்டு பயணிகள் கனெக்டிங் விமானங்களை தவற விட்டதால் பெங்களூரு உள்ளிட்ட பல விமான நிலையங்கள் போர்க்களமாக மாறின. பல மணி நேரம் விமானத்திற்காக காத்திருந்த பயணிகள், விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவித்ததால் விமான நிறுவன ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
கனெக்டிங் விமானங்களை தவற விட்டதால் வெளிநாட்டு பயணிகளும் புலம்பித் தீர்த்தனர். அந்த பயணிகள் தங்கள் பெட்டி உள்ளிட்ட உடைமைகளை பெறுவதும் பெரும் கடினமானது. மக்களவை நேரடியாக பாதித்த இந்த பிரச்னையை தீர்க்க வேண்டிய ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து துறை வெறும் கண்துடைப்புக்கான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்தது. இண்டிகோவின் ஏ-320 ரக விமானங்களுக்கு மட்டும் புதிய விமான பணி நேர வரம்பு விதிமுறையிலிருந்து விலக்கு அளித்தும் எந்த பயனும் ஏற்படவில்லை. வரும் 10 அல்லது 15ம் தேதிக்குள் மட்டுமே நிலைமையை சரி செய்ய முடியும் என இண்டிகோ சிஇஓ பீட்டர் எல்பர்ஸ் வெளிப்படையாக ஒப்புக் கொண்டார்.
இந்நிலையில், 5வது நாளாக நேற்றும் நாடு முழுவதும் 850க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கான விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் பல விமானங்கள் ரத்தானதால் நேற்றும் பயணிகள் பாடு திண்டாட்டமானது. இந்த பிரச்னைக்கு முழுக்க முழுக்க இண்டிகோ நிறுவனம் மட்டுமே காரணம் என ஒன்றிய அரசு பொறுப்பை தட்டிக் கழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. டிக்கெட் ரத்து செய்யப்பட்ட பயணிகளுக்கு இன்று இரவுக்கும் டிக்கெட் கட்டணத்தை முழுமையாக திருப்பித் தரவும், பயணிகள் தங்கள் உடைமைகளை சிரமமின்றி மீட்க விமான நிறுவனம் உதவுமாறும் உத்தரவிட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் மீறல்கள் ஏற்பட்டால் விமான நிறுவனத்திற்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஒன்றிய அரசு மிரட்டி உள்ளது.
இதற்கிடையே, பல பயணிகளும் இண்டிகோவை தவிர்த்து வேறு விமானத்தில் பயணிக்க நினைத்தால் விமான டிக்கெட் கட்டணங்கள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்தன. கடைசி நேர டிக்கெட் முன்பதிவுக்கான டிக்கெட் கட்டணத்தை விமான நிறுவனங்கள் பல மடங்கு உயர்த்தின. டெல்லி-மும்பை விமான டிக்கெட் கட்டணம் ரூ.70 ஆயிரம் வரை எகிறியது. கொல்கத்தா-மும்பை விமான டிக்கெட் விலை ரூ.90,000 வரையிலும் மும்பை-புவனேஸ்வருக்கான ஏர் இந்தியா டிக்கெட் விலை ரூ.84,485 ஆகவும் உயர்ந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, உள்நாட்டு விமான சேவைக்கான டிக்கெட் கட்டணத்திற்கு தற்காலிக உச்சவரம்பு விலையை ஒன்றிய அரசு நேற்று நிர்ணயித்தது. சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் விடுத்த அறிக்கையில், ‘500 கிலோமீட்டர் வரை பறக்கும் விமானத்திற்கு, கட்டணங்கள் ரூ.7,500 ஆகவும், 500-1,000 கிலோமீட்டர் வரையிலான விமானங்களுக்கு, டிக்கெட் விலை வரம்பு ரூ.12,000 ஆகவும் நிர்ணயிக்கப்படுகிறது.
1,000-1,500 கிலோமீட்டர் தூரத்திற்கு இயக்கப்படும் விமானங்களுக்கு, கட்டணம் ரூ.15,000 ஆகவும், 1,500 கிலோமீட்டருக்கு மேல் உள்ள விமானங்களுக்கு, கட்டணம் ரூ.18,000 ஆகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. நிலைமை சீராகும் வரை இந்த உச்சவரம்புகள் அமலில் இருக்கும். விமான நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் பயண தளங்களுடன் நிகழ்நேர தரவுகள் மற்றும் தீவிர ஒருங்கிணைப்பு மூலம் கட்டண நிலைகள் உன்னிப்பாகக் கண்காணிக்கப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது.
* இன்று இரவு 8 மணிக்குள் டிக்கெட் கட்டணம் வாபஸ்
ரத்தான விமானங்களுக்கான டிக்கெட் கட்டணத்தை பயணிகளுக்கு திருப்பி தரும் பணி தீவிரமாக நடப்பதாக இண்டிகோ நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதற்காக அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் புதிய வசதி செய்யப்பட்டிருப்பதாகவும் இன்று இரவு 8 மணிக்குள் அனைத்து பயணிகளுக்கும் டிக்கெட் கட்டணத்தில் எந்த பிடித்தமும் இல்லாமல் திருப்பி தரப்படும் என்றும் உறுதி அளித்துள்ளது. மேலும், வெள்ளிக்கிழமை 1000 விமானங்கள் ரத்தான நிலையில் நேற்று 850 ஆக குறைக்கப்பட்டிருப்பதாகவும் விரைவில் நிலைமை சீராகும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
* ஏர் இந்தியா டிக்கெட் கட்டணம் உயர்கிறது
விமான டிக்கெட் விலை உச்ச வரம்பை அரசு அறிவித்த சில மணி நேரத்திலேயே ஏர் இந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான கட்டணத்தை அதிகரிக்க அந்நிறுவனம் திட்டமிட்டிருப்பதாக அறிக்கை வெளியிட்டது. அனைத்து விமானங்களுக்கும் கட்டணங்களை கட்டுப்படுத்துவது தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமில்லை என கூறியிருக்கும் ஏர் இந்தியா, இண்டிகோ நெருக்கடியால் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு உதவ, திறனை அதிகரிக்க முயற்சிப்பதாகவும் கூறி உள்ளது.
* சென்னையில் 48 விமானம் ரத்து
இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் சென்னையில் நேற்று முன்தினம் மதியத்தில் இருந்து முழுவதுமாக நிறுத்தப்பட்டு இருந்தன. இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் மீண்டும் சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் இயங்க தொடங்கின. முதல் விமானம் அதிகாலை 3 மணிக்கு சென்னையில் இருந்து புனேக்கு புறப்பட்டு சென்றது. தொடர்ந்து அகமதாபாத், அந்தமான், கவுகாத்தி, கொல்கத்தா, புவனேஸ்வர், கோவை, ஜெய்ப்பூர், கொச்சி உள்ளிட்ட 10 விமானங்கள் இயங்க தொடங்கின. மேலும் படிப்படியாக, பல்வேறு இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவைகள் நேற்று இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, நேற்று காலையில் இருந்து இரவு வரையில் சென்னையில் இருந்து டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, விசாகப்பட்டினம், ஐதராபாத், கொச்சி, பெங்களூரு, கோவை, புவனேஸ்வர், பாட்னா உள்ளிட்ட 28 இடங்களுக்கு செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. அதேபோல், நேற்று அதிகாலையில் இருந்து இரவு வரை டெல்லி, மும்பை, ஐதராபாத், கொல்கத்தா, திருவனந்தபுரம், கொச்சி, அந்தமான், கோவை உள்ளிட்ட 20 விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டது. நேற்று ஒரே நாளில் 28 புறப்பாடு விமானங்களும், 20 வருகை விமானங்களும், மொத்தம் 48 இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து என்று அறிவிக்கப்பட்டது.
* ஒரு பஸ் வரவில்லை என்றாலே கூப்பாடு போடுகிறவர்கள் எங்கே?
தமிழகத்தில் உள்ள பஸ் நிலையங்களில் ஒரு பஸ் வரவில்லை என்றால் கூட சிலர் சமூக வலைதளங்களில் பொங்குவார்கள். பலர், இதே நிலைதான் தமிழகம் முழுவதும் நீடிக்கிறது என்று தெரியாமல் அளந்து விடுவார்கள். ஆனால் நாடு முழுவதும் இண்டிகோவின் விமான போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் தினமும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியர்கள் மட்டுமல்ல, வெளிநாட்டைச் சேர்ந்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னை கடந்த 5 நாட்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. ஆனால் இதுகுறித்து ஒருவர் கூட வாய் திறப்பதில்லை. ஊடகங்கள் கூட பெரிதாக கண்டுகொள்வதில்லை. பிரச்னையை உருவாக்குபவர்களுக்கு தேவை பிரச்னை கிடையாது. காரணம் மட்டுமே என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
* டிக்கெட் கவுண்டர் மீது ஏறி பெண் பயணி ரகளை
நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இண்டிகோ விமான நிறுவன கவுண்டர் முன்பாக நேற்றும் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். விமான தாமதம், ரத்து தொடர்பாக அந்நிறுவன ஊழியர்களிடம் இருந்து சரியான பதில் கிடைக்காததால் பலர் திட்டித் தீர்த்தனர். இதற்கிடையே கனெக்டிங் விமானத்தை தவற விட்ட பெண் பயணி ஒருவர் டிக்கெட் கவுண்டர் மீது ஏறி ரகளை செய்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகின. பல மணி நேரம் காத்திருந்த பிறகு விமானம் ரத்து என கூறியதால் பயணிகள் பலரும் விரக்தியில் போராட்டம் நடத்திய சம்பவங்களும் அரங்கேறின.
* அரசு விமான நிறுவனம் இல்லாததன் பாதிப்பு
ஒரே பொதுத்துறை விமான நிறுவனமாக இருந்த ஏர் இந்தியாவை ஒன்றிய பாஜ அரசு தனியாருக்கு தாரை வார்த்தது. இதனால் விமான நிறுவனமே இல்லாமல் ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் வேடிக்கை பார்க்கும் அமைச்சகமாக மாறியது. இந்த நிலையில், இண்டிகோ விவகாரத்தில் மக்கள் நலன் பற்றி கவலைப்படாமல் அனைத்து தனியார் விமான நிறுவனங்களும் டிக்கெட் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தின. கூடுதல் விமானங்கள் இயக்கப்பட்டாலும் அவை லாப நோக்கத்தை மட்டுமே கணக்கில் கொண்டுள்ளன. இந்த சம்பவத்தில் தான் அரசுக்கென தனி விமான நிறுவனம் இல்லாததன் பாதிப்பை மக்கள் உணர்ந்துள்ளனர்.
* மோடியின் உத்தரவாதம் என்னாச்சு: காங். கேள்வி
காங்கிரஸ் எம்பி சசிகாந்த் செந்தில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் கூறுகையில், ‘‘இண்டிகோவில் நடந்து வரும் குழப்பம் விபத்து அல்ல. பாஜ அரசு இத்துறையில் போட்டியை நசுக்குவதற்கும், விருப்பமானவர்களுக்கு வெகுமதி அளிப்பதற்கும், தனது பெருநிறுவன கூட்டாளிகளுக்கு ஏற்றவாறு முழு தேசியத் துறையையும் மறுவடிவமைப்பதற்கும் இடைவிடாமல் மேற்கொண்ட முயற்சியின் நேரடி விளைவு.
இது விமானப் போக்குவரத்துத் துறையை நசுக்கியுள்ளது, பயணிகளை ஆபத்தில் ஆழ்த்தியுள்ளது, சந்தைகளை சீர்குலைத்துள்ளது. வெளிப்படைத்தன்மை, போட்டி மற்றும் பொது நலன் மீதான அரசாங்கத்தின் முழுமையான புறக்கணிப்பை அம்பலப்படுத்தியுள்ளது. விமான பயணத்தை எளிதாக்குவதாக மோடி உத்தரவாதமளித்தார். ஆனால் விமான பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார். இந்த நெருக்கடிக்கு விமான போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு பொறுப்பேற்பாரா?’’ என்றார்.