பல்கலைக்கழக மானிய குழு உத்தரவு: கல்லூரிகளிலும் மும்மொழி கட்டாயம்: மீண்டும் தலைதூக்கும் மொழி பிரச்னை: கல்வியாளர்கள் கடுமையான எதிர்ப்பு
சென்னை: அனைத்து கல்லூரிகள் மற்றும் மாநில பல்கலைக்கழகங்களில் மும்மொழி கட்டாயம் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவித்திருப்பது ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருமொழி கொள்கைதான் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தி மொழியை படிக்க வேண்டும் என்று ஒன்றிய அரசு பல வழிகளில் மாநிலங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. அதன் அடுத்த திட்டமாக அனைத்து கல்லூரிகளிலும், அரசு மற்றும் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் தாய் மொழியுடன் 3வது ஒரு இந்திய மொழியை கற்பிக்க வேண்டும் என்று பல்கலைக்கழக மானிய குழு அறிவித்துள்ளது. இது கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானிய குழுவின் அறிவிப்பில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, முனைவர் பட்ட படிப்பு ஆகியவற்றில் தாய்மொழியுடன் 3வதாக ஒரு இந்திய மொழியை கற்பிக்க வேண்டும். அதாவது, அரசின் அட்டவணையில் உள்ள 23 மொழிகளில் ஒரு மொழியையும் சேர்த்து கற்பிக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தவரை தமிழ், ஆங்கிலம் ஆகிய இருமொழி மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது.
ஏற்கனவே தேசிய கல்வி கொள்கை திட்டத்தின்மூலம் பள்ளிக்கல்வியில் ஒன்றிய அரசு இந்தியை கட்டாயமாக்க முயன்று வருகிறது. இந்த நிலையில், உயர் கல்வியிலும் மும்மொழி கொள்கையை கொண்டுவர பல்கலைக்கழக மானிய குழு மூலம் ஒன்றிய அரசு திட்டமிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பல்கலைக்கழக மானிய குழு செயலாளர் மனிஸ் ஜோஸி கூறும்போது, மாணவர்களின் திறனை மேம்படுத்த கூடுதல் மொழிகளை கற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பிஎம் ஸ்ரீ பள்ளிகளில் மும்மொழிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் மொழி மற்றும் ஆங்கிலம் மட்டுமே கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போது பல்கலைக்கழக மானிய குழு மூன்று மொழிகளை கற்க வேண்டும் என்று கூறியிருப்பது அதிர்சியை ஏற்படுத்தியுள்ளதாக உயர் கல்வி ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். மூன்றாவதாக கற்கும் மொழி அடிப்படை, இன்டர் மீடியேட், அட்வான்ஸ் என்ற அடிப்படையில் கற்பிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல்களின் அடிப்படையில் இந்த மும்மொழி அனைத்து உயர் கல்வி நிலையங்களிலும் அமல்படுத்தப்பட வேண்டும். இதுகுறித்து சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் பி.துரைசாமி கூறும்போது, கூடுதல் மொழி என்பது தேர்ந்தெடுக்கப்படும் விருப்ப மொழியாக இருக்க வேண்டுமே தவிர அது கட்டாயமாக்கப்படக்கூடாது. இந்த அறிவிப்பால் ஆசிரியர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாவார்கள்’’ என்றார்.
இதுகுறித்து உயர் கல்வி நிலையங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் கூறும்போது, ‘பல்கலைக்கழக மானியக்குழுவின் இந்த அறிவிப்பின்படி இந்திய மொழியை கற்பதால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லை. இந்த 3வது மொழியால் வேலைவாய்ப்பும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அன்னிய நாட்டு மொழியில் எதையாவது கற்றால் வெளிநாட்டு வேலை வாய்ப்பாவது கிடைக்கும்.
அதனால்தான் பல பொறியியல் கல்லூரிகளில் வெளிநாட்டு மொழிகளும் கற்பிக்கப்படுகின்றன. அதுமட்டமல்லாமல் தொழிநுட்ப கல்லூரிகளும் கல்வி நிலையங்களும் சிறந்த தமிழாசிரியர்களை நியமிக்க சிரமப்படுவார்கள்’ என்றனர். எப்படியாவது தமிழகம் போன்ற மாநிலங்களில் இந்தியை கொண்டு வந்துவிட வேண்டும் என்று ஒன்றிய அரசு ஒவ்வொரு காயாக நகர்த்தி வருகிறது என்று கல்வியாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.