பல்கலை பாடத்திட்டத்தில் ஜோதிடம்; மாணவர்கள் முற்றுகை போராட்டம்
சென்னை: பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஜோதிடத்தை சேர்க்கும் பல்கலைக்கழக மானியக் குழுவின் LOCF (Learning outcome and curriculum framework) அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய மாணவர் கூட்டமைப்பு நேற்று சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சாஸ்திரி பவன் முன்பு முற்றுகை போரட்டத்தை நடத்தினர்.
கல்வியில் மத கலவரத்தை புகுத்த நினைக்கும் இந்த அறிக்கையை திரும்ப பெற வலியுறுத்தியும் , ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். தொடர்ந்து பல்கலைக்கழக மானியக் குழுவின் LOCF அறிக்கையை தீயிட்டு கொளுத்த முயன்ற மாணவர்களை, போலீசார் தடுத்ததால், மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களை போலீசார் குண்டுகட்டாக கைது செய்து வாகனத்தில் அழைத்து சென்றனர்.
முன்னதாக நிருபர்களுக்கு பேட்டி அளித்த எஸ்எப்ஐ மாநில செயலாளர் சம்சீர் அகமது கூறுகையில், ‘‘வாஜ்பாய் பிரதமராக இருந்த பொழுது வந்த சுற்றறிக்கை தான் தற்பொழுது யுஜிசி வெளியிட்டுள்ளது. 9 முக்கிய பாடத்திட்டங்களில் திருத்தங்களை கொண்டுவந்து, இந்தியாவின் கல்வி முறையை பின்னோக்கி செல்லும் செயல் திட்டமாக இது உள்ளது.
கல்வியை ஒன்றிய அரசு காவி மயமாக்கி வருகிறது. மனுதர்மம், அர்த்தசாஸ்திரம் உள்ளிட்ட பாடத்திட்டங்களை புகுத்துகின்றனர். மனுதர்மத்தை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று சொல்வது நியாயம் இல்லை. தனக்குத்தானே வீரர் என்று சொல்லிக்கொண்ட மாபெரும் கோழையான சாவர்க்கரின் பெயரை படிக்க வேண்டிய நிலைமை ஏன் ஏற்படுத்துகிறார்கள்.
இந்தியாவின் மதசார்பின்மைக்கு எதிராக சாதி பாகுபாட்டை முன்னுறுத்தி இந்த அறிக்கை உள்ளது. இதனை ஒன்றிய பாஜக அரசு திரும்பப் பெற வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களில் நிதி நெறிக்கடியை ஏற்படுத்தி, தமிழ் மொழிக்கும் தமிழ் நாட்டிற்கும் எதிராக யுஜிசி செயல்படுகிறது’’ என்றார்.