ஒன்றிய அமைச்சகங்களுக்கான கர்தவ்யா பவனை திறந்து வைத்தார் பிரதமர் மோடி: சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்டது
புதுடெல்லி: சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட முதல் கர்தவ்யா பவனை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார். டெல்லியின் பிரதான பகுதியான ராஜ் பாத் (ராஜ பாதை) பகுதியின் பெயரை கர்தவ்யா (கடமை) பாத் என ஒன்றிய அரசு பெயர் மாற்றம் செய்தது. விஜய் சவுக் முதல் இந்தியா கேட் வரையிலான இப்பகுதி சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் கீழ் நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே, புதிய நாடாளுமன்றம் கட்டிடம் மற்றும் துணை ஜனாதிபதியின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகம் கட்டப்பட்டு விட்டது. இதைத் தொடர்ந்து, அனைத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் அலுவலகங்களை ஒரே இடத்தில் கொண்டு வரும் வகையில் பொது மத்திய செயலக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதற்காக, மொத்தம் 10 கர்தவ்யா பவன் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.
இதில், கர்தவ்யா பவன்-3 கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நிலையில் பிரதமர் மோடி நேற்று அதனை திறந்து வைத்தார். ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சர் மனோகர் லால் கட்டர் மற்றும் அமைச்சக செயலாளர் செயலாளர் கடிகிதலா ஸ்ரீனிவாஸ் ஆகியோருடன் பிரதமர் மோடி புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை சுற்றிப் பார்த்தார். கர்தவ்ய பவன் 3 கட்டிடமானது 1.5 லட்சம் சதுர மீட்டரில் அமைந்துள்ளது. இங்கு, தலா 45 பேர் அமரக்கூடிய 24 பிரதான கூட்ட அரங்குகள், தலா 25 பேர் அமரக் கூடிய 26 கூட்ட அரங்குகள், 67 கூட்ட அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. 27 லிப்ட்கள் உள்ளன. வாகன நிறுத்துமிடத்தில் 600 கார்கள் வரையிலும் நிறுத்த முடியும். இதுதவிர இங்கு, குழந்தை பராமரிப்பு மையம், யோகா அறை, மருத்துவ அறை, உணவருந்தும் இடம், சமையலறை மற்றும் பல்நோக்கு மண்டபம் ஆகியவையும் உள்ளன.
கர்தவ்ய பவன் 3 கட்டிடத்திற்கு, ஒன்றிய உள்துறை, வெளியுறவு, கிராமப்புற மேம்பாடு, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை, பணியாளர் நலத்துறை, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகங்கள் மற்றும் முதன்மை அறிவியல் ஆலோசகர் அலுவலகங்கள் மாற்றப்பட உள்ளன. அடுத்ததாக கர்தவ்யா பாத் 1 மற்றும் 2வது கட்டிடங்கள் அடுத்த மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பல்வேறு ஒன்றிய அமைச்சக அலுவலகங்கள் சாஸ்திரி பவன், கிருஷி பவன், உத்யோக் பவன், நிர்மான் பவன் போன்ற 1950 மற்றும் 1970களில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்களில் செயல்படுகின்றன. இந்த கட்டிடங்கள் கட்டமைப்பு ரீதியாக காலாவதியானவை. எனவே புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரையிலும் இந்த 4 பவன்களில் உள்ள அலுவலகங்கள் அடுத்த 2 ஆண்டுகளுக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்படுவதாக அமைச்சர் கட்டார் தெரிவித்துள்ளார். சென்ட்ரல் விஸ்டா திட்டத்தின் 2ம் கட்டத்தில் புதிய பிரதமர் இல்லம் கட்டப்பட உள்ளது.