ஒன்றிய அமைச்சரான பிறகும் கர்நாடகாவுக்கு ஆதரவாக பேசிய சோமண்ணா நம்பகத்தன்மையை இழந்து விட்டார்: ராமதாஸ் குற்றச்சாட்டு
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழ்நாட்டின் உரிமைகள் பாதிக்கப்படும் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில் அது குறித்து தமிழக அரசு எவ்வாறு பேச்சு நடத்த முடியும்?. ஒன்றிய நீர்வளத்துறை இணையமைச்சர் வி.சோமண்ணா கர்நாடகத்தை சேர்ந்தவர். பசவராஜ் பொம்மை தலைமையிலான அரசில் கர்நாடக வீட்டுவசதித்துறை அமைச்சராக பொறுப்பு வகித்த போதே மேகதாது அணைக்கு ஆதரவாக குரல் கொடுத்து வந்தவர். ஒன்றிய நீர்வளத்துறை இணை அமைச்சராக சோமண்ணா நியமிக்கப்பட்டபோதே அதற்கு தமிழக விவசாயிகளிடம் இருந்து எதிர்ப்பு எழுந்தது. ஒன்றிய அமைச்சரான பிறகும் கர்நாடகத்திற்கு ஆதரவாக பேசியதன் மூலம் அமைச்சர் சோமண்ணா நடுநிலையையும், நம்பகத்தன்மையையும் இழந்து விட்டார். இனியாவது அவர் அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவான அமைச்சராக செயல்பட வேண்டும். மேகதாது அணை தொடர்பாக பேச்சு நடத்த ஒன்றிய அரசிடமிருந்து அழைப்பு வந்தால் அதை தமிழக அரசு ஏற்கக் கூடாது.