சென்னை விமான நிலையத்தில் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியின் ஹெலிகாப்டருக்கு அனுமதி மறுப்பு: காரில் புறப்பட்டு சென்றார்
சென்னை: ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று பிற்பகல் 2.20 மணிக்கு, புதுச்சேரியில் இருந்து தனி விமானத்தில், சென்னை விமான நிலையம் வந்து, பிற்பகல் 2.30 மணிக்கு, சென்னையில் இருந்து தனி ஹெலிகாப்டரில், மறைமலைநகர் போர்டு தொழிற்சாலை வளாகத்தில் இறங்கினார்.
பின்னர், அங்கிருந்து காரில், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு விட்டு, மீண்டும் தனியார் பல்கலைக்கழகத்தில் இருந்து காரில், போர்டு தொழிற்சாலை வளாகத்திற்கு சென்று, அங்கிருந்து தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மாலை 4.40 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்து, மாலை 5 மணிக்கு, தனி விமானத்தில் நாக்பூர் புறப்பட்டு செல்ல திட்டமிட்டு இருந்தார். ஆனால் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, புதுச்சேரியில் இருந்து காலதாமதமாக, மாலை 4.15 மணிக்கு தான், சென்னை பழைய விமான நிலையம் வந்தார். அங்கிருந்து உடனடியாக தனி ஹெலிகாப்டரில் புறப்பட்டு, மறைமலைநகர், போர்ட் தொழிற்சாலை வளாகத்திற்கு சென்று, காரில் தனியார் பல்கலைக்கழகம் சென்று, பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார்.
இந்த நிலையில் பட்டமளிப்பு விழா முடிவடைவதற்கு தாமதம் ஆகிவிட்டதால், ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, மறைமலைநகர் போர்ட் தொழிற்சாலை வளாகத்தில் இருந்து, சென்னை பழைய விமான நிலையத்திற்கு தனி ஹெலிகாப்டரில் வருவதற்கு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி கொடுக்க மறுத்துவிட்டனர். பொதுவாக பாதுகாப்பு நலன் கருதி, ஹெலிகாப்டர்கள் மாலை 6 மணிக்கு மேல், வானில் பறப்பதற்கு, சிவில் விமான போக்குவரத்து துறை, விமான நிலைய கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அனுமதி கொடுப்பது கிடையாது. அந்த அடிப்படையில் ஒன்றிய அமைச்சரின் ஹெலிகாப்டர் பயணத்திற்கு, சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில், அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் பாதுகாப்புத்துறை ராணுவம் சம்பந்தப்பட்ட ஹெலிகாப்டர்களுக்கு, இந்த தடை உத்தரவு கிடையாது. ஒன்றிய அமைச்சரின் பாதுகாப்பு அதிகாரிகளும், சாலை வழியாக விமான நிலையம் செல்வது தான் சிறந்தது என்று கூறினர். இதையடுத்து ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி, மாலை 6 மணி அளவில், பொத்தேரியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இருந்து, காரில் புறப்பட்டு, மாலை 6.50 மணிக்கு, சென்னை பழைய விமான நிலையம் வந்து சேர்ந்தார். சென்னை பழைய விமான நிலையத்தில் இருந்து, இரவு 7 மணிக்கு, தனி விமானத்தில், அமைச்சர் நிதின் கட்கரி நாக்பூர் புறப்பட்டு சென்றார்.