ஒன்றிய அரசின் கொள்கையால் அழிந்துவரும் சிறு, குறுந்தொழில்களை பாதுகாக்க போராட்டம்: சிஐடியு மாநில தலைவர் தகவல்
கோவை: ஒன்றிய அரசின் தவறான கொள்கையால் அழிந்து வரும் சிறு, குறு தொழில்களை பாதுகாக்க போராட்டங்களில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக சிஐடியு மாநில தலைவர் கூறினார்.
கோவை நவ இந்தியா பகுதியில் உள்ள தனியார் அரங்கில் கடந்த 6ம் தேதி முதல் நடைபெற்று வந்த சிஐடியு 16வது மாநில மாநாடு நேற்று நிறைவடைந்தது. இதில் புதிய தலைவராக ஜி.சுகுமாறன், பொதுச்செயலாளராக எஸ்.கண்ணன், பொருளாளராக எஸ்.ராஜேந்திரன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இறுதி நாள் நிகழ்வாக உழைக்கும் மக்கள் பேரணி நடைபெற்றது. பேரணியில், ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
இதையடுத்து சிவானந்தா காலனி பகுதியில் பொதுக்கூட்டம் சிஐடியு மாநில துணைத் தலைவர் அ.சவுந்திரராசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டதில் சங்கத்தின் புதிய மாநிலத் தலைவர் ஜி.சுகுமாறன் பேசியதாவது: மக்கள் நலனுக்காக போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். எதிர்காலத்தில் இந்தியாவில் ஒரு அரசியல் மாற்றத்தை உருவாக்க வேண்டும் என இந்த மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டது.
ஒன்றிய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டத் திருத்தங்களை திரும்ப பெற வைத்த நாளான நவம்பர் 26ம் தேதியன்று அனைத்து சங்கங்களுடன் இணைந்து பிரசாரங்களில் ஈடுபட உள்ளோம். ஒப்பந்த தொழிலாளர் முறையை அதிகப்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது. 10 ஆண்டுகள் பணியாற்றிய தொழிலாளர்களை நிரந்தரமாக்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ. 26 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது சட்டத்தில் தான் இருக்கிறது.
ஆனால் யாருக்கும் கிடைக்கவில்லை. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வருகிற ஜனவரி 19 முதல் 25 வரை தொடர் பிரசார இயக்கம் மற்றும் 29ம் தேதி மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளால் சிறு, குறு தொழில்கள் அழிந்து கொண்டிருக்கிறது. சிறு, குறு தொழில்களை பாதுகாக்க போராட்டங்களில் ஈடுபட சிஐடியு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.