ஒன்றிய அரசு குறித்து கடுமையாக விமர்சனம் செய்து வரும் வேளையில் நடிகர் விஜய்க்கு எதிராக பேச தமிழக பாஜவினருக்கு திடீர் தடை: டெல்லி மேலிடம் அதிரடி உத்தரவு
சென்னை: ஒன்றிய அரசு குறித்து கடுமையாக விமர்சித்து வரும் வேளையில் விஜய்க்கு எதிராக பேச தமிழக பாஜவினருக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லி மேலிடம் அதிரடி உத்தரவால் பாஜ தலைவர்கள் மவுனம் காத்து வருகின்றனர். தமிழக வெற்றி கழகம் கட்சியை நடிகர் விஜய் தொடங்கியதில் இருந்து ஒன்றிய பாஜ அரசை கடுமையாக விமர்சித்து பேசி வருகிறார். நமது ஒரே கொள்கை எதிரி பாஜ. நமக்கு, யாருக்காகவும் எதற்காகவும் எந்த பயமும் இல்லை. நாம் கூட்டணி வைத்து ஏமாற்றும் கட்சி கிடையாது. பாசிச பாஜவுடன் உறவு வச்சுக்க நாமென்ன உலக மகா ஊழல் கட்சியா? நாம யார் தெரியுமா? இந்தியாவின் மாபெரும் சக்தி கொண்ட மகத்தான வெகுஜன மக்கள் படை. நாம் எந்த அடிமைக் கூட்டணியிலும் சேர வேண்டிய அவசியமில்லை. ஒருபுறம் ஆர்எஸ்எஸ்-ஸிடம் அடிபணிந்து கொண்டு, இன்னொரு பக்கம் மதச்சார்பற்ற கூட்டணி என்று மக்களை ஏமாற்றும் கூட்டணி அமைப்பதெல்லாம் நாம் செய்வதில்லை.
2026 தேர்தலில் தவெக-திமுக இடையே தான் போட்டி. அதனால், அலையன்ஸ வச்சு தப்பிச்சுடலாம்னு நினைக்குறவங்க கனவு ஒரு நாளும் மெய்ப்படாது. பிரதமர் மோடி 3வது முறையாக ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்து இருக்கிறீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்யவா? இல்லை. சிறுபான்மையின மக்களுக்கு எதிராக சதி செய்யவா?. மக்கள் நலனுக்காக, அவர்களின் சார்பில் நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கிறேன். தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை நிறுத்த கச்சத்தீவை மீட்டுக் கொடுங்கள். உங்கள் முரட்டுப் பிடிவாதத்தால் நடக்கும் நீட் தேர்வை ரத்து செய்யுங்கள். அது போதும். செய்வீர்களா?. என்றும் ஒவ்வொரு இடத்திலும் ஒன்றிய பாஜ அரசை குற்றம் சாட்டி வந்தார்.
கடைசியாக அவர் பங்கேற்ற பிரசார கூட்டத்தில் \\”ஜெயலலிதா கூறிய அதிமுக பாதையை இன்று கட்சி முற்றிலும் மறந்துவிட்டது. பாஜவுடன் அதிமுக வைத்திருக்கும் கூட்டணி பொருந்தாத கூட்டணி என்றும் கூறியிருந்தார். கிடைக்கும் நேரம் எல்லாம் பாஜவை விமர்சிப்பதை விஜய் வழக்கமாக கொண்டிருந்தார். அதற்கு ஏற்றார் போல் பாஜ தலைவர்களும் நடிகர் விஜய்க்கு பதிலடி கொடுத்து வந்தனர். ஒரு கட்டத்தில் அவரை கூட்டணியில் இணைப்பதற்காக முயற்சிகளும் பாஜ மேலிடம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், கடைசி வரை அவர் கூட்டணிக்கு ஒத்துக்கொள்ளவில்லை.
இந்நிலையில் கரூர் சம்பவம் நடைபெற்று 40 அப்பாவிகள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்துக்கு அனைத்து அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்து இருந்தனர். நடிகர், நடிகைகள் வரை கொந்தளித்தனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எப்படியாவது விஜயை தங்கள் பக்கம் இழுக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அனைவரும் எதிராக இருப்பதால் கடைசியில் நம் பக்கம் தான் உதவி கேட்டு விஜய் வர வேண்டும் என்று பாஜ நினைக்கிறது. இதற்கு அச்சாரமாக நடிகர் விஜய் பற்றி விமர்சிக்கவோ, எதிராக பேசவோ வேண்டாம் என்று டெல்லி பாஜ மேலிடம் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், தான் பாஜ தலைவர்கள் விஜயை விமர்சிப்பதை தவிர்த்து வருவதாக கூறப்படுகிறது.
கரூரில் நடந்த சம்பவத்திற்கு ஆறுதல் கூற சென்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரனாக இருக்கட்டும், முன்னாள் தலைவர் அண்ணாமலையாக இருக்கட்டும் விஜய்க்கு எதிராக எந்த கருத்தையும் அவ்வளவாக தெரிவிக்கவில்லை. மாறாக தமிழக அரசு மீதும், கூட்டத்திற்கு போலீசார் உரிய பாதுகாப்பும் வழங்கவில்லை என்றும் கூறி வருகின்றனர். டெல்லி மேலிடம் உத்தரவால் தான் தமிழக பாஜ தலைவர்கள் விஜய் பற்றி வாய் திறந்து பேச மறுக்கிறார்கள் என்று ஒரு தகவல் வெளியாகியுள்ளது.