மதுரை: மதுரையில் ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான தீர்ப்பாயம் அமைக்கக் கோரிய வழக்கில், ஒன்றிய அரசு தரப்பில் பதிலளிக்குமாறு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை ஐகோர்ட் வக்கீல்கள் சங்கத்தினர் சார்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான தீர்ப்பாயம் சென்னையில் செயல்படுகிறது. இதில் ஒன்றிய அரசு ஊழியர்கள் மீதான புகார்கள், கோரிக்கைகள், துறைரீதியான நடவடிக்கைகள் தொடர்பாக தீர்ப்பாயத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இந்த தீர்ப்பாயம் சென்னையில் உள்ளதால் தமிழ்நாடு முழுவதும் உள்ள ஒன்றிய அரசு ஊழியர்கள் சென்னை அலுவலகத்திற்கு செல்ல காலதாமதமும், அதிக அலைச்சலும் ஏற்படுகிறது. எனவே, இந்த தீர்ப்பாயத்தின் கிளையை மதுரையில் அமைக்குமாறு உத்தரவிடவேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார், ஜி.அருள்முருகன் ஆகியோர் மனுவிற்கு ஒன்றிய அரசு தரப்பில் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 4 வாரம் தள்ளி வைத்தனர்.