ஒன்றிய அரசு நிதி வழங்கியதால் நடவடிக்கை 2025-26ம் கல்வியாண்டிற்கான கட்டாயக்கல்வி மாணவர் சேர்க்கை: 6ம் தேதி அறிவிப்பு வெளியீடு
சென்னை: ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து 2025-26ம் கல்வியாண்டிற்கான கட்டாய கல்வி மாணவர் சேர்க்கை அறிவிப்பு வருகிற 6ம் தேதி வெளியிடப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளி கல்வித்துறை செயலாளர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுகள் மற்றும் உச்ச நீதிமன்ற நடவடிக்கைகளின் அடிப்படையில், ஒன்றிய அரசால் மாநிலத்திற்கு வழங்க வேண்டிய ஆர்டிஇ (தேசிய கல்வி கொள்கை) நிதி விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
2025-26 கல்வியாண்டிற்கான ஆர்டிஇ மாணவர் சேர்க்கை சிறப்பம்சங்கள்
1. சேர்க்கை ஒதுக்கீடு:
* அனைத்து சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் 25% ஒதுக்கீடு.
* சேர்க்கை நடைமுறைகள் RTE Act, 2009 மற்றும் தமிழ்நாடு RTE விதிகள், 2011 அடிப்படையில் நடைபெறும்.
2. சேர்க்கை முறை:
* அதிகாரப்பூர்வ இணையதளம் வழியாக ஆன்லைன் சேர்க்கை.
* தற்போது குழந்தைகள் நுழைவு நிலை வகுப்பில் கல்வி பயிலும் அதே பள்ளியில் இந்த கல்வியாண்டிற்கான சேர்க்கை மேற்கொள்ளப்படும்.
* ஏற்கனவே சேர்க்கப்பட்ட தகுதியான மாணவர்களை RTE ஒதுக்கீட்டின் கீழ் பதிவு செய்வதற்காக 10 நாள் கால அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது.
3. முன்னுரிமை பிரிவுகள்:
* ஆதரவற்றோர்
* எச்.ஐ.வி. பாதிக்கப்பட்டோர்
* மாற்றுப் பாலினத்தவர்
* தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள்
* மாற்றுத் திறனாளிகள் ஒதுக்கீட்டை விட விண்ணப்பங்கள் அதிகமானால், குலுக்கல் நடைமுறை பின்பற்றப்படும்.
4. வசூலித்த கட்டணத்தை திருப்பிச் செலுத்தல்:
* RTE தகுதியுடைய மாணவர்களிடம் இருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது.
* ஏற்கனவே கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், 7 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்த வேண்டும்.
5. கண்காணிப்பு மற்றும் புகார் தீர்வு:
* மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையிலான குழுக்கள் மூலம் கண்காணிப்பு.
* புகார்களுக்காக பிரத்யேகமான உதவி எண் மற்றும் மின்னஞ்சல் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6. கல்வி சமத்துவம் மற்றும் அணுகலை உறுதி செய்தல்:
* தமிழ்நாடு அரசு, ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமையை உறுதிப்படுத்தும் நோக்கில், இச்சேர்க்கை நடைமுறையை தெளிவான, சமத்துவமான மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட முறையில் மேற்கொள்கிறது. ஒன்றிய அரசால் நிதி விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு வருகிற 6ம் தேதி வெளியிடப்படும். இவ்வாறு தமிழக அரசு அறிவித்துள்ளது.
* திராவிட மாடல் அரசு முறியடிக்கும்: அன்பில் மகேஷ் உறுதி
பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று வெளியிட்டுள்ள வலைதள பதிவு: கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி 2025-26ம் கல்வியாண்டிற்கான மாணவச் சேர்க்ைக நடைமுறைகள் தொடங்குகின்றன. கல்வியை பறிக்க எத்தனை தடைகள் வந்தாலும், திராவிட மாடல் அரசு முறியடிக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மாணவர் சேர்க்கை அட்டவணை
6.10.2025 - மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியீடு
7.10.2025 - நுழைவு வகுப்பில் நிரப்பப்பட்ட மொத்த மாணவர் எண்ணிக்கை பதிவேற்றம்
8.10.2025 - மொத்த மாணவர் எண்ணிக்கையில் 25% ஒதுக்கீடு, பள்ளி உள்நுழைவில் காட்டப்பட வேண்டும்.
9.10.2025 - தகுதியுடைய மாணவர்களின் விவரங்கள் (ஆதார், பிறப்பு/இருப்பிடம்/வருமானம் மற்றும் சாதிச் சான்றிதழ்) பதிவேற்றம்.
10.10.2025 முதல் 13.10.2025 - தகுதியான / தகுதியற்ற விண்ணப்பதாரர்கள் பட்டியல் அறிவிப்பு - விடுபட்ட ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வாய்ப்பு
14.10.2025 - தகுதி பெற்ற மாணவர் இறுதி பட்டியல் வெளியீடு
15.10.2025 - தகுதியுடைய மாணவர்களை EMIS Portal-ல் உள்ளீடு செய்தல்
16.10.2025 - விண்ணப்பங்கள் 25%ஐ மீறினால், சிறப்பு முன்னுரிமை பிரிவுகளுக்கு பின், குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் பெயர் அறிவித்தல்
17.10.2025 - தேர்வு செய்யப்பட்ட மாணவர்களை EMIS Portal-ல் உள்ளீடு செய்தல்
மின்னஞ்சல் முகவரி : rteadmission@tnschools.gov.in