ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 8ஆவது சம்பளக்கமிஷன் அமல் 2028 வரை தள்ளிப்போகிறதா? தலைவர், உறுப்பினர் நியமனம் தாமதம்
புதுடெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 8வது சம்பளக்கமிஷன் அமல் 2028ஆம் ஆண்டுக்கு தள்ளிப்போகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான 8வது சம்பள கமிஷன் 2026 ஜனவரி 1 முதல் அமலுக்கு வரும் என்று கடந்த ஜனவரி மாதம் பிரதமர் மோடி வெளியிட்ட அறிவிப்பு அரசு ஊழியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இன்று வரை சம்பள கமிஷன் அமைக்கப்படவில்லை. 8வது சம்பள கமிஷனுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும்.
அவர்கள் பல்வேறு துறை அரசு அமைப்புகள் மற்றும் துறைகளை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் அறிக்கை தயாரித்து ஒன்றிய அரசுக்கு அளிப்பார்கள். அந்த அறிக்கையை ஆய்வு செய்யும் ஒன்றிய அரசு தேவையான திருத்தங்களை மேற்கொண்டு, அதன் பின் ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் பெறப்பட்டு சம்பள கமிஷன் அறிவிக்கப்படும். 8வது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் 1.92 அல்லது 2.86 பிட்மேன் பேக்கர் பின்பற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இன்னும் சம்பளக்கமிஷன் அமைக்காததால் 8வது ஊதியக் குழுவின் பரிந்துரை 2027 ஆம் ஆண்டின் இறுதியில் அல்லது 2028 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் அமல்படுத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஏனெனில் 7வது ஊதியக் குழு அறிவிக்கப்பட்டதிலிருந்து, அதன் பரிந்துரைகளை செயல்படுத்த சுமார் 2 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் ஆனது. இந்த ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி ஒன்றிய அரசு 8வது ஊதியக் குழுவை அறிவித்தாலும், அதன்பிறகு இதுவரை எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த ஆகஸ்ட் மாதம் 8வது ஊதியக் குழுவை அரசாங்கம் முறையாக அறிவிக்கும் என்று வைத்துக் கொண்டால், அதன் பரிந்துரைகள் 2028 ஜனவரியில் தான் அமலுக்கு வர வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில் 8வது ஊதியக்குழுவுக்கான தலைவர், உறுப்பினர்கள் இன்று வரை ஒன்றிய அரசால் நியமிக்கப்படவில்லை. இது ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளிடையே கவலைகளை எழுப்பியுள்ளது.
* ஒன்றிய அரசு சொல்வது என்ன?
ஒன்றிய நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் கூறும்போது,’ 8வது ஊதியக்குழு தொடர்பாக அரசு சரியான பரிந்துரைகளை பெற்றுள்ளது. எனவே சரியான நேரத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் 8வது சம்பளக்கமிஷன் பரிந்துரைகள் அமல்படுத்தப்படும்’ என்றார்.