ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 3% அகவிலைப்படி உயர்வை ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஆண்டுக்கு 2 முறை உயர்த்தி வழங்கப்படும். நாட்டில் நிலவும் பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் வைத்து அகவிலைப்படி என்பது மாற்றி அமைக்கப்படும்.
அதன்படி, இந்த ஆண்டுக்கான முதல் அகவிலைப்படி கடந்த மார்ச் மாதம் 2% உயர்த்தப்பட்டது. அப்போது அகவிலைப்படி அடிப்படைச் சம்பளத்தில் 53%லிருந்து 55%ஆக உயர்ந்தது. இந்நிலையில் நடப்பாண்டில் 2வது முறையாக ஒன்றிய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3% உயர்த்த டெல்லியில் பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
3% அகவிலைப்படி உயர்வை ஜூலை 1ம் தேதி முதல் முன்தேதியிட்டு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அகவிலைப்படி 55%ல் இருந்து 58% ஆக உயர்த்தி வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த உயர்வு, பணியில் இருக்கும் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஊழியர்கள் இருவருக்கும் பயனளிக்கும்.