ஒன்றிய அரசு மின்சார சட்ட திருத்தத்தால் 150 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை சொத்து தனியாருக்கு விற்க வழிவகுக்கும்: தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு தகவல்
சென்னை: ஒன்றிய அரசு மின்சார சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பு தமிழ்நாடு மின்துறைப் பொறியாளர்கள் அமைப்பு சார்பில் நேற்று நடைபெற்றது. அமைப்பின் தலைவர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது: தற்போது கொண்டு வரும் சட்டதிருத்தம் 150 லட்சம் கோடி மதிப்பிலான பொதுத்துறை விநியோக நிறுவனங்களின் சொத்துக்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு விற்க வழிவகுக்கும். ஜி.எஸ்.டி கவுன்சில் போல் எலக்ட்ரிசிட்டி கவுன்சில் அமைக்கிறது.
அதன் மூலம் இனி மாநிலங்கள் எப்போதும் எதிர்க்க முடியாத நிலையைக் கொண்டு வருகிறது. சட்டத்திருத்தம் மக்களுக்கான மின்சாரக் கட்டணத்தை மேலும் 80 சதவீதம் உயர்த்தச் சொல்லுகிறது. யூனிட் ரூ.4க்கு அடக்கவிலையான மின்சாரத்தை சந்தையில் ரூ.16 லிருந்து ரூ.24 வரை விற்றுக் கொள்ள அனுமதிக்கிறது. சட்டத்தில் திருத்தங்கள் குறித்து ஆய்வு செய்ய மாநில அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு 51 சதவீதம் பங்குகளைத் தனியாருக்கு விற்று விட்டு நிர்வாகத்தையும் தனியாரிடமே ஒப்படைக்கவேண்டும் என சொல்கிறது.
இதன் படி, தமிழ்நாடு விநியோக நிறுவத்தின் சொத்து மதிப்பு தோராயமாக ஐந்து லட்சம் கோடி. பங்தொகையோ வெறும் 5,693 கோடி. இதில் 51 சதவீதம் என்பது 2,903 கோடிதான், தனியார் இதைச் செலுத்தினால் போதும் அல்லது 26 சதவீதம் பங்குகளை தனியாருக்கு விற்று விட்டு. விநியோக நிர்வாகத்தையும் தனியாரிடம் ஒப்படைக்கவேண்டும். தமிழ்நாட்டில் 26 சதவீதம் என்பது 1,480 கோடி. இதனை ஏற்கா விட்டால் பங்குச் சந்தையில் விநியோக நிறுவனத்தை பட்டியலிடவேண்டும். ஒன்றிய நிதிநிறுவனங்களோ, ஒன்றிய அரசோ மாநில அரசுக்கு நிதியைத் தராது. எனவே இந்த சட்ட திருதத்தை தமிழக அரசு ஏற்கிறதா என்று அரசு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.