ஒன்றிய அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் தமிழக விவசாயிகள் போராட்டம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த விவசாயிகள் அதன் தலைவர் பி.ஆர் பாண்டியன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து கர்நாடகா அரசு மேகதாட்டு அருகே அணை கட்ட முயற்சிக்கும் நடவடிக்கையை சட்டவிரோதம் என ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் என முழக்கம் எழுப்பினர்.
மேலும் தமிழ்நாடு, கர்நாடகா விவசாயிகள் கோரிக்கையை ஏற்று ராசிமணல் அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும், முல்லைப் பெரியாறு அணைக்கு ஒன்றிய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும். முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவு 152 அடியாக உயர்த்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இவைத்தவிர வேளாண்மையில் மரபணு திருத்தப்பட்ட விதைகளை அனுமதிக்க கூடாது என்றும், மரபணு மாற்றுத் தொழில்நுட்பத்திற்கு தடை விதித்திட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்கள். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பி.ஆர்.பாண்டியன், ‘‘கர்நாடகா விவசாயிகளுக்கும், தமிழ்நாடு விவசாயிகளுக்கும் பலன் அளிக்கும் வகையில் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ராசி மணல் அணக திட்டத்தை நிறைவேற்ற ஒன்றிய அரசு அனுமதி வழங்க வேண்டும். குறிப்பாக இந்த திட்டத்தினால் பெங்களூருக்கு குடிநீரும், தமிழ்நாட்டுக்கு விவசாயத்திற்கு தேவையான நீரும் கிடைக்கும்.
அதேப்போன்று முல்லைப் பெரியாறு அணையில் நீர் மட்டதை உயர்த்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு இருந்தும் அதனை செயல்படுத்துவதற்கு முட்டுக்கட்டையாக கேரளா அரசு உள்ளது. குறிப்பாக அணையின் பாதுகாப்பை ஒரு காரணமா காட்டி இதுபோன்ற நடவடிக்கையை கேரளா எடுத்து வருகிறது. எனவே இந்த விவகாரத்தில் ஒன்றிய அரசு தலையிட்டு உரிய தீர்வை பெற்று தர வேண்டும் .மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எப்போதும் அனுமதியை ஒன்றிய அரசு வழங்கக் கூடாது என்று தெரிவித்தார்.