மருந்து நிறுவனத்திடம் ரூ.1.9 கோடிக்கு பரிசு பெற்ற 30 மருத்துவர்களை ஒன்றிய அரசு காப்பாற்றுகிறதா?: தகவல் சட்டத்தில் அம்பலமாகியும் நடவடிக்கை இல்லை
இந்த மருத்துவர்கள், மொனாக்கோ மற்றும் பாரிஸ் போன்ற நாடுகளுக்கு மருத்துவ மாநாடு என்ற பெயரில் இன்பச் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இதுகுறித்துக் கேட்டபோது, மருத்துவர்களின் பெயர்கள் தனிப்பட்ட தகவல் என்றும், அதை வெளியிடுவதில் பொதுநலன் இல்லை என்றும் கூறி மருந்துத் துறை பெயர்களை வெளியிட மறுத்துவிட்டது. இந்த விவகாரம் குறித்து மருந்துத் துறை அமைத்த சிறப்புத் தணிக்கைக் குழு, ‘அப்பிவி’ நிறுவனம் விதிகளை அப்பட்டமாக மீறியுள்ளதைக் கண்டறிந்தது. ஆனாலும், அந்த நிறுவனத்திற்கு மருந்துத் துறையின் உயர்மட்டக் குழு வெறும் கண்டனம் மட்டுமே தெரிவித்துவிட்டு, சட்டப்படி எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், விதிமீறலில் ஈடுபட்ட மருத்துவர்களின் பெயர்களை தேசிய மருத்துவ ஆணையத்திடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதே குழு பரிந்துரை செய்திருந்தும், இன்றுவரை குற்றம் சாட்டப்பட்ட 30 மருத்துவர்களின் பெயர்கள் அனுப்பவில்லை. இவ்விசயத்தில் குற்றம்சாட்டப்பட்ட 30 மருத்துவர்களையும் ஒன்றிய அரசு காப்பாற்றுகிறதா?’ என்ற கேள்வி எழுந்துள்ளது என்றார்.