ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து ஸ்டிரைக்: 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு வங்கி, அஞ்சல் சேவை பாதிக்கப்படும் அபாயம்
புதுடெல்லி: ஒன்றிய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளர் சட்டங்களை எதிர்த்து வரும் 26ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்துக்கு 10 தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளது. இதனால் வங்கி, அஞ்சல் சேவைகள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் 2020ம் ஆண்டு நிறைவேறிய 4 தொழிலாளர் சட்டங்கள் நேற்று முன்தினம் முதல் நடைமுறைக்கு வருவதாக ஒன்றிய அரசு அறிவித்தது. அதன்படி, 4 தொழிலாளர் சட்டங்கள் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளன.
இதில், ஏற்கனவே இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஊதிய குறியீடு, தொழில்துறை குறியீடு, சமூக பாதுகாப்பு குறியீடு, தொழில்துறை பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் பணி சூழல் குறியீடு என 4 சட்டங்களாக ஒருங்கிணைத்து, புதிய விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் புதிய தொழிலாளர் சட்டங்கள் அமலுக்கு வந்தது. இவை முற்போக்கான சீர்திருத்தங்கள் என பிரதமர் மோடி தெரிவித்தார். ஆனால் இந்த 4 புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரும் 26ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டம் நடைபெறும் என ஒன்றிய தொழிற்சங்கங்கள் கூட்டாக அறிவித்துள்ளன.
இது தொடர்பாக ஐஎன்டியுசி, ஏஐசிடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, தொமுச உள்பட 10 ஒன்றிய தொழிற்சங்கங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏற்கனவே நடைமுறையில் இருந்த 29 தொழிலாளர் நலச்சட்டங்களை நீக்கிவிட்டு அவற்றுக்கு பதிலாக புதிதாக 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ஒன்றிய அரசு உருவாக்கி அவற்றை அமல்படுத்தியுள்ளது. தொழிலாளர் விரோத, முதலாளிகளுக்கு ஆதரவான இந்த சட்டங்களை தன்னிச்சையாக நடைமுறைப்படுத்தி இருப்பதற்கு ஒன்றிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளும் நவ. 21 முதல் அமல்படுத்தப்படும் என ஜனநாயக விரோத, தன்னிச்சையான அறிவிக்கை வெளியிட்டது, அனைத்து ஜனநாயக நெறிமுறைகளையும் மீறும் செயல்.
இது தொழிலாளர் நலன்களை முற்றிலும் சிதைத்துள்ளது. இந்த சட்டங்களை தொடக்க நிலையிலேயே தொழிற்சங்கங்களும், தொழிலாளர் நல கூட்டமைப்புகளும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி பீகார் சட்டமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து 4 தொழிலாளர் சட்ட தொகுப்புகளையும் ஒன்றிய அரசு திடீரென அமல்படுத்தியுள்ளது. இவை உழைக்கும் வர்க்கத்தினரின் நலன்களுக்கு முற்றிலும் எதிரானவை. இந்த சட்ட தொகுப்புகளை தொழிலாளர்களின் வாழ்வாதாரங்களுக்கு எதிரான இனரீதியிலான தாக்குதலாக கருதுகிறோம்.
இவை தொழிலாளர்களை அடிமையாக்குவதுடன் அவர்களின் உரிமைகளை முற்றிலும் பறிக்கும். இந்த சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் கூட்டமைப்புகள் சார்பில் வரும் 26ம் தேதி நாடு தழுவிய பொது வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. இந்த சட்ட தொகுப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொழிலாளர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்ற வேண்டும். அதோடு வரும் திங்கட்கிழமை முதல் வாயிற்கூட்டம், தெருமுனை கூட்டம் என எதிர்ப்பு நடவடிக்கை பணிகளில் ஈடுபட வேண்டும். இந்த 4 சட்ட தொகுப்புகள் வாபஸ் பெறப்படும் வரை உழைக்கும் மக்கள் வலிமையுடன் போராடுவார்கள் என்ற எச்சரிக்கையை ஒன்றிய அரசுக்கு விடுக்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசு அமல்படுத்திய தொழிலாளர் சட்டங்களுக்கு எதிராக, வரும், 26ம் தேதி நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தவும், வர்த்தக கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் ரயில் மற்றும் பொது போக்குவரத்து, வங்கிகள், அஞ்சல் சேவைகள், காப்பீடு, சுங்க தொழில்களில் உள்ள தொழிலாளர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்பதால் இந்த துறையின் செயல்பாடுகள் பாதிக்கப்படும். இதனால் உற்பத்தித் துறை மற்றும் பிற தொழில்களுக்குப் பெரும் நிதி இழப்பு ஏற்படும். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.