ஒன்றிய நிதியமைச்சர் விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2025-26 ஆம் ஆண்டு நிதியாண்டில், NABARD வங்கியின் ஊரக உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (Rural Infrastructure Development Fund - RIDF) கீழ் ரூ.4,500 கோடிக்கான நிதியையும், மீன்வள உட்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின் (FIDF) கீழ் குளச்சல் மீன்பிடித் துறைமுக விரிவாக்கத்திற்கு ரூ. 350 கோடி நிதியையும் விரைந்து வழங்கிட ஒப்புதல் அளிக்குமாறு ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தமிழ்நாடு அரசு சார்பில் நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழியுடன், அமைச்சர் தங்கம் தென்னரசு இணைந்து, இன்று டெல்லியில் ஒன்றிய நிதி அமைச்சரைச் சந்தித்து, அக்கடிதத்தை வழங்கியதுடன் விரைவில் உரிய நிதியினை வழங்கிட ஆவன செய்யுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் கோரிக்கையை ஏற்று ஒன்றிய நிதி அமைச்சர் நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது; "குளச்சல் துறைமுக விரிவாக்கப் பணிகளைத் தொடங்கிட வேண்டும் என குமரி மாவட்ட மீனவர்கள் என்னைச் சந்தித்து, தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். தமிழ்நாட்டின் இந்த நியாயமான கோரிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் ஏற்றுக்கொண்டு, விரைவில் உரிய நிதியை விடுவிப்பார் என நம்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.