சாலையோர வியாபாரிகளுக்கான கடன் வழங்கும் திட்டத்தை நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: சாலையோர வியாபாரிகளுக்கான பிரதமரின் ஸ்வநிதி திட்டத்தின் மறுசீரமைப்பு மற்றும் கடன் வழங்கும் காலத்தை 31.03.2030 வரை நீட்டித்து ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மறுசீரமைக்கப்பட்ட இத்திட்டம், 50 லட்சம் புதிய பயனாளிகள் உட்பட 1.15 கோடி பயனாளிகளுக்குப் பயனளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்தத் திட்டத்திற்காக மொத்தமாக 7,332 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மறுசீரமைக்கப்பட்ட இந்தத் திட்டத்தின் மூலம், 50 லட்சம் புதிய பயனாளிகள் உட்பட மொத்தம் 1.15 கோடி தெரு வியாபாரிகள் பயனடைவார்கள்.
இந்தத் திட்டத்தை மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகம் (MoHUA) மற்றும் நிதி சேவைகள் துறை (DFS) ஆகியவை இணைந்து செயல்படுத்தும். நிதி சேவைகள் துறை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் மூலம் கடன் மற்றும் கடன் அட்டைகள் கிடைப்பதை உறுதி செய்யும்.
* மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
முதல் மற்றும் இரண்டாம் தவணைக் கடன்களுக்கான தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. முதல் தவணைக் கடன் ரூ.10,000-லிருந்து ரூ.15,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணைக் கடன் ரூ.20,000-லிருந்து ரூ.25,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இரண்டாம் தவணைக் கடனைத் திருப்பிச் செலுத்திய பயனாளிகளுக்கு UPI உடன் இணைக்கப்பட்ட ரூபே (RuPay) கிரெடிட் கார்டு வழங்கப்படும். இது அவர்களின் அவசரத் தேவைகளுக்கும் வணிக விரிவாக்கத்திற்கும் உதவும்.
தெருவோர வியாபாரிகளின் டிஜிட்டல் ஈடுபாட்டை உறுதி செய்வதற்காக சில்லறை/மொத்த பரிவர்த்தனைகளுக்கான டிஜிட்டல் கேஷ்பேக் சலுகைகள், தெருவோர வியாபாரிகளின் கணக்கெடுப்பு, தெருவோர வியாபாரிகளின் திறன் மேம்பாடு.
* விரிவாக்கப்பட்ட திட்டம்:
இந்தத் திட்டம் தற்போது நகர்ப்புறங்கள் மட்டுமல்லாமல், கணக்கெடுப்பு நகரங்கள் மற்றும் புறநகர் பகுதிகளுக்கும் படிப்படியாக விரிவுபடுத்தப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ், தெரு வியாபாரிகளுக்குத் தொழில்முனைவு, நிதி விழிப்புணர்வு, டிஜிட்டல் திறன்கள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சிகள் வழங்கப்படும். குறிப்பாக உணவு வியாபாரிகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துடன் (FSSAI) இணைந்து சுகாதாரம் மற்றும் உணவுப் பாதுகாப்புப் பயிற்சிகளும் அளிக்கப்படும்.
இந்தத் திட்டம், 'பொது நிர்வாகத்தில் சிறந்து விளங்குவதற்கான பிரதமரின் விருது' மற்றும் 'டிஜிட்டல் மாற்றத்திற்கான அரசு செயல்முறை மறுசீரமைப்பிற்கான வெள்ளி விருது' போன்ற பல தேசிய அங்கீகாரங்களைப் பெற்றுள்ளது. இந்தத் திட்டத்தின் நீட்டிப்பு, தெரு வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, அவர்களின் தொழிலை விரிவாக்க உதவும். இது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், நகர்ப்புறங்களை ஒரு தன்னிறைவு பெற்ற சுற்றுச்சூழலாக மாற்றுவதற்கும் வழிவகுக்கும்.
கூமாபட்டி அணை மேம்பாட்டு பணி : 10 கோடி ஒதுக்கீடு
சென்னை: கூமாப்பட்டி பிளவக்கல் அணையில் பூங்கா மேம்பாட்டுக்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீட்டுள்ளது. சுற்றுச்சுவர், நுழைவு வாயில், நடைபாதை, உடற்பயிற்சி கூடம், செல்ஃபி பாயிண்ட் அமைக்கப்படுகிறது. விருதுநகர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதல்வர் அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.