ஒன்றிய அரசுடன் கருத்து வேறுபாட்டால் ஜெகதீப் தன்கர் விலகலா?.. பரபரப்பு தகவல்கள்
டெல்லி: ஒன்றிய அரசுடனான கருத்து வேறுபாட்டால் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வரை இக்கூட்டத்தொடர் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த சூழலில் நேற்று மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளில் ஜெகதீப் தன்கர் மாநிலங்களவையை வழிநடத்தினார். இந்த சூழலில் நேற்று இரவு துணை ஜனாதிபதி உடல் நலக்குறைவால் பதவியில் இருந்து விலகுவதாக ஜெகதீப் தன்கர் திடீரென அறிவித்தார். இதுதொடர்பாக தனது ராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு அனுப்பி வைத்தார்.
ஒன்றிய அரசுடனான கருத்து வேறுபாட்டால் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. நீதிபதி யஷ்வந்த் வர்மா பதவி நீக்க தீர்மானத்தை இரு அவைகளிலும் கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டிருந்தது. நேற்று நடந்த மாநிலங்களவை அலுவல் ஆய்வுக் குழு கூட்டத்தில் தீர்மானம் பற்றி விவாதிக்க ஜெகதீப் தன்கர் ஒப்புதல் அளித்ததாக கூறப்படுகிறது. ஜெகதீப் தன்கரின் முடிவால் ஒன்றிய அரசு அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. ஒன்றிய அரசின் அதிருப்தி காரணமாக ஜெகதீப் தன்கர் தானே முன்வந்து பதவி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நீதித்துறையில் முறைகேட்டை தடுக்க தேசிய நீதிபதிகள் நியமனக் குழுவை அமைக்க குரல் கொடுத்தார் ஜெகதீப் தன்கர்.
ஒன்றிய அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக ஜெகதீப் தன்கர் செயல்பட்டதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் அண்மையில் தன்கர் சந்தித்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர்களுடன் தன்கர் நெருக்கம் காட்டியதையும் ஒன்றிய அரசு தரப்பு விரும்பவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.