ஒன்றிய அரசு, தேர்தல் ஆணையத்தை கண்டித்து வாக்கு திருட்டு தொடர்பாக டெல்லியில் இன்று பேரணி: ஜனாதிபதியிடம் மனு அளிக்க காங். திட்டம்
புதுடெல்லி: ஒன்றிய பாஜ அரசும், தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து வாக்கு திருட்டு சதியில் ஈடுபடுவதை கண்டித்து காங்கிரஸ் சார்பில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் இன்று பிரமாண்ட பேரணி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒன்றிய பாஜ அரசு, தேர்தல் ஆணையத்தை தவறாக பயன்படுத்தி வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம்சாட்டுகிறார்.
இதுதொடர்பாக சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் பேசிய ராகுல் காந்தி, தேர்தல் ஆணையர்கள் தங்கள் பதவிக்காலத்தில் செய்யும் செயல்களுக்கு எந்த பொறுப்பேற்காமல் இருக்க வழிவகை செய்யும் சட்டம் இயற்றியது ஏன் என்பது உள்ளிட்ட 3 கேள்விகளை எழுப்பினார். இதற்கு பதிலளித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசிய போது, வாக்கு திருட்டு தொடர்பான ஆதாரங்களை வெளியிட்ட தனது பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய குற்றச்சாட்டு குறித்து நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என ராகுல் காந்தி சவால் விடுத்தார்.
இந்நிலையில், தேர்தலில் முறைகேடு செய்ய கூட்டு சேர்ந்த ஒன்றிய பாஜ அரசையும், தேர்தல் ஆணையத்தையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்த டெல்லி ராம் லீலா மைதானத்தில் பிரமாண்ட பேரணி நடத்த காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ளது. இதில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, முன்னாள் தலைவர் ராகுல் காந்தி உரையாற்ற உள்ளனர். மேலும் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, கே.சி.வேணு கோபால், ஜெய்ராம் ரமேஷ், சச்சின் பைலட் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர்.
இந்த பேரணியை தொடர்ந்து வாக்கு திருட்டுக்கு எதிராக சேகரிக்கப்பட்ட 5.5 கோடி கையெழுத்துகளுடன் கூடிய கோரிக்கை மனுவை ஜனாதிபதியை நேரில் சந்தித்து வழங்கவும் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இது குறித்து காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வாக்கு திருட்டு விவகாரம் குறித்து மக்கள் விவாதித்து வருகின்றனர். இதற்கு உத்வேகம் அளிக்க இந்த பேரணியை நடத்துகிறோம்’’ என்றார்.