ஒன்றிய அமைச்சரவை அறிவிப்பு; ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்: 78 நாள் சம்பளம் வழங்கப்படும்; 10.9 லட்சம் பேருக்கு பலன்
புதுடெல்லி: ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனசாக 78 நாள் சம்பளம் வழங்கப்படும் என ஒன்றிய அமைச்சரவை அறிவித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் 10.9 லட்சம் ரயில்வே ஊழியர்கள் பலனடைவார்கள். ஒவ்வொரு ஆண்டும் துர்கா பூஜை மற்றும் தசரா பண்டிகைகளுக்கு முன்பாக ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவிப்பு வெளியிடப்படும். அந்த வகையில், தீபாவளி போனஸ் அறிவிப்புக்காக ரயில்வே ஊழியர்கள் காத்திருந்த நிலையில், பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.
இதில், ரயில்வே ஊழியர்களுக்கு 2024-25ம் நிதியாண்டுக்கான 78 நாள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தி திறன் அடிப்படையிலான போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த போனஸ், தண்டவாள பராமரிப்பாளர்கள், லோகோ பைலட்டுகள், ரயில்வே கார்டுகள், நிலைய மேலாளர்கள், மேற்பார்வையாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், உதவியாளர்கள், பாயிண்ட்ஸ்மேன்கள், அமைச்சக ஊழியர்கள் மற்றும் பிற குரூப் சி ஊழியர்களுக்கு வழங்கப்படும். மொத்தம் 10 லட்சத்து 91 ஆயிரத்து 146 ஊழியர்கள் இந்த தீபாவளி போனசை பெற உள்ளனர்.
இது, ரயில்வே ஊழியர்களின் சிறந்த செயல்திறனை அங்கீகரிப்பதாகவும், உற்பத்தித்திறனை மேலும் மேம்படுத்துவதற்கான ஊக்கமாகவும் வழங்கப்படுவதாக ஒன்றிய அரசு கூறி உள்ளது. இந்த ஆண்டு ஒவ்வொரு ஊழியருக்கும் வழங்கப்படும் அதிகபட்ச போனஸ் ரூ.17,951 ஆக இருக்கும். இதன் மூலம் அரசுக்கு ரூ.1,865.68 கோடி செலவாகும்.
புதிய ஜிஎஸ்டியில் வரி குறைப்புக்கு மத்தியில் ரயில்வே ஊழியர்களுக்கு வழங்கப்படும் போனஸ், பண்டிகை காலத்தில் அவர்களின் வாங்கும் திறனை அதிகரிக்கும் என்றும் அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. 2024-25ம் நிதியாண்டில் ரயில்வே துறை 1,614.90 மில்லியன் டன் சரக்கு போக்குவரத்தையும், 7.3 பில்லியன் பயணிகள் போக்குவரத்தையும் செயல்படுத்தி சிறந்த செயல்திறனை பதிவு செய்துள்ளதாக ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, இந்தியாவின் கடல்சார் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முக்கிய நடவடிக்கையாக உள்நாட்டு கப்பல் கட்டும் துறையை புத்துயிர் பெறச் செய்யும் நோக்கில் ரூ.69,725 கோடி நிதி தொகுப்பிற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், கப்பல் கட்டும் நிதி உதவித் திட்டம் மார்ச் 31, 2036 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.24,736 கோடி நிதி ஒதுக்கப்படும்.
இதே போல, கடல்சார் மேம்பாட்டு நிதி ரூ.20,000 கோடி கடல்சார் முதலீட்டு நிதியுடன் அங்கீகரிக்கப்பட்டது. ரூ.19,989 கோடி செலவில் கப்பல் கட்டும் மேம்பாட்டுத் திட்டம், உள்நாட்டு கப்பல் கட்டும் திறனை 4.5 மில்லியன் மொத்த டன்னாக விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும், ஆராய்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், ரூ.2,277.397 கோடி செலவில் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (சிஎஸ்ஐஆர்) ‘திறன் மேம்பாடு மற்றும் மனித வள மேம்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
* தேர்தல் நெருங்கும் பீகாருக்கு முக்கிய சாலை, ரயில் திட்டம்
பீகாரில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில் அம்மாநிலத்திற்கு முக்கிய சாலை, ரயில் திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பீகாரில் உள்ள 104 கிமீ பக்தியார்பூர்-ராஜ்கிர்-திலையா ஒற்றை ரயில் பாதையை ரூ.2,192 கோடியில் இரட்டிப்பாக்குவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த ரயில் பாதை ராஜ்கிர், நாலந்தா மற்றும் பவாபுரி போன்ற முக்கிய சுற்றுலா மற்றும் புனித யாத்திரை மையங்களுக்கான இணைப்பை மேம்படுத்தி, 1,434 கிராமங்கள் மற்றும் கயா மற்றும் நவாடா ஆகிய மாவட்டங்களில் வசிப்பவர்கள் உட்பட 13.46 லட்சம் மக்களுக்கு ரயில் அணுகலை மேம்படுத்தும் என ரயில்வே துறை கூறி உள்ளது.
இதே போல, பீகாரில் சாஹேப்கஞ்ச்-அரேராஜ்-பெட்டியா பகுதியில் 78.942 கிமீ தேசிய நெடுஞ்சாலை, ரூ.3,822.31 கோடி செலவில் நான்கு வழி பசுமைச் சாலையாக கட்டவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சாலை திட்டம் மூலம் பலர் வேலைவாய்ப்பு பெறுவதோடு, பொருளாதார நடவடிக்கையை மேம்படுத்தவும் உதவும் என ஒன்றிய அரசு கூறி உள்ளது.
* மருத்துவ படிப்புகளில் 10,000 கூடுதல் இடங்கள்
ஒன்றிய மற்றும் மாநில அரசு மருத்துவக் கல்லூரிகளை வலுப்படுத்தி மேம்படுத்துவதற்கான திட்டத்தின் 3ம் கட்டத்திற்கு அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது. இதன்படி, 5,000 முதுகலை இடங்களை அதிகரிக்கவும், 5,023 எம்பிபிஎஸ் இடங்களை ஒரு இருக்கைக்கு ரூ. 1.50 கோடி என்ற அதிகரித்த செலவு உச்சவரம்புடன் அதிகரிக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த முயற்சி இளங்கலை மருத்துவத் திறனை கணிசமாக அதிகரிக்கும், கூடுதல் முதுகலை இடங்களை உருவாக்குவதன் மூலம் சிறப்பு மருத்துவர்கள் கிடைக்கும் தன்மையை அதிகரிக்கும் மற்றும் அரசு மருத்துவமனைகளில் புதிய சிறப்புப் பிரிவுகளை அறிமுகப்படுத்த உதவும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.