குக்கி அமைப்புடன் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு மெய்தி அமைப்பு எதிரிப்பு : மணிப்பூரில் மீண்டும் பதற்றம்
இம்பால்: மணிப்பூரில் குக்கி அமைப்புடன் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு மெய்தி அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பத்துள்ளது. மணிப்பூரில் கடந்த 2023ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து மெய்தி மற்றும் குக்கி ஆகிய இரு சமூகத்தினரிடையே மோதல் உருவானது. கடந்த இரண்டரை ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த கலவரத்தால், 260க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பல்லாயிரக்கணக்கானோர் தங்களது வீடுகளை இழந்து வெளி மாநிலத்தில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
மணிப்பூரில் வன்முறையை தூண்டியதாக முதலமைச்சராக இருந்த பா.ஜ.க.வை சேர்ந்த பிரேன் சிங் தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து. மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கலவரத்தால் இரண்டரை ஆண்டுகளாக பற்றி எரியும் மணிப்பூருக்கு பிரதமர் மோடி செல்லவேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில், வரும் 13 ஆம் தேதி பிரதமர் மோடி மணிப்பூருக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து மணிப்பூரில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியாக குக்கி, ஸோ இன குழுக்களுடன் ஒன்றிய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி தேசிய நெடுஞ்சாலையை திறந்த விட சம்மதம் இரு பிரிவினரும் ஒப்புக்கொண்டதாக தகவல் வெளியாகின. இந்த நிலையில், மணிப்பூரில் குக்கி அமைப்புடன் ஒன்றிய அரசு நடத்திய பேச்சுவார்த்தைக்கு மெய்தி அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஒன்றிய அரசின் ஒரு தலைப்பட்சமான இந்த முடிவை ஏற்க முடியாது என்று மெய்தி போராட்டக்குழுவினர் கூறியுள்ளனர். மெய்தி குழுவினரின் சமரச முயற்சியை நிராகரித்துள்ளதால் மணிப்பூரில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.