தீர்ப்புகளை அவைக்கு உள்ளேயோ, வெளியே விமர்சிக்கக்கூடாது : நாடாளுமன்றத்தில் எம்.பிக்களுக்கு கட்டுப்பாடுகள் விதித்த ஒன்றிய அரசு!!
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் டிசம்பர் 1ம் தேதி தொடங்க உள்ள நிலையில், எம்பிக்களுக்கு கட்டுப்பாடுகளை ஒன்றிய அரசு விதித்துள்ளது. மாநிலங்களவைத் தலைவர் வழங்கும் தீர்ப்புகளை அவைக்கு உள்ளேயோ, வெளியே விமர்சிக்கக்கூடாது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் டிசம்பர் 1ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் சிவில் அணுசக்தி துறையில் தனியாருக்கு அனுமதி வழங்குவது, இந்திய உயா்கல்வி ஆணையம் அமைப்பது, வணிகத்தை எளிமைப்படுத்த பெருநிறுவன சட்டங்கள் முன்மொழிவது உள்ளிட்ட 10 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இதனிடையே எஸ்ஐஆர் உள்ளிட்ட விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பத்திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி மாநிலங்களவையில் எம்பிக்களுக்கு விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில், மாநிலங்களவைத் தலைவர் வழங்கும் தீர்ப்புகளை அவைக்கு உள்ளேயோ, வெளியே விமர்சிக்கக் கூடாது, ஒன்றிய அமைச்சர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து பேசினால், சம்பந்தப்பட்ட நபர் அவையில் இருக்க வேண்டும். அப்போது மட்டுமே பேச அனுமதிக்கப்படும். இல்லாவிட்டால் அது விதிமீறலாக கருதப்படும். மாநிலங்களவைக்குள் பேனர் உள்ளிட்டவற்றை உறுப்பினர்கள் காண்பிக்கக் கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.