ஒன்றிய அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு பருத்தி விளைச்சலில் பெரும் மாற்றத்தை கொண்டு வரும்
*இந்தியப் பருத்தி கூட்டமைப்பு நம்பிக்கை
கோவை : பருத்தி ஆராய்ச்சிக்கு ஒன்றிய அரசு ரூ.2,500 கோடி ஒதுக்கீடு செய்வது பருத்தி விளைச்சலில் பெரும் மாற்றத்தை கொண்டுவரும் ஆற்றல் கொண்டது என இந்தியப் பருத்தி கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.கோவை சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஜி.கே.எஸ். காட்டன் சேம்பரில் இந்தியப் பருத்தி கூட்டமைப்பின் 46வது ஆண்டுக் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் அக்கூட்டமைப்பின் தலைவராக ஜே. துளசிதரன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பி. நடராஜ் மற்றும் ஆதித்யா கிருஷ்ணபதி ஆகியோர் துணைத் தலைவர்களாகவும், நிஷாந்த் ஆஷர் கௌரவச் செயலாளராகவும், சேத்தன் ஜோஷி கௌரவ இணைச் செயலாளராகவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பின்னர் பேசிய அக்கூட்டமைப்பின் தலைவர் ஜே. துளசிதரன் கூறியதாவது, ‘‘உலகெங்கிலும் இயற்கையான நிலையான இழைகளுக்கு முக்கியத்துவம் என்பது வளர்ந்து வருகிறது.
நுகர்வோரும், நிறுவனங்களும் செயற்கை இழைகளை விட சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்று தயாரிப்புகள் மேல் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்தச் சூழ்நிலை என்பது பருத்திக்கு சாதகமாக அமைந்துள்ளது. இக்கூட்டமைப்பு இந்த வாய்ப்பை முழுமையாகப் பயன்படுத்திக்கொண்டு, இந்தியப் பருத்தியை உலகின் விருப்பமான தயாரிப்பாக நிலைநிறுத்த பணியாற்றும்.
2025-26ம் ஆண்டு காலத்திற்கான பருத்தி சாகுபடிப் பகுதி சுமார் 12 மில்லியன் ஹெக்டேராக இருக்கும். அத்துடன் சாதகமான தட்பவெப்ப நிலை இருந்தால், இந்தியாவில் 320-325 லட்சம் பருத்தி பேல்கள் உருவாகும் என மதிப்பிட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளாகப் பருத்தி ஆராய்ச்சிக்கு நிதி ஒதுக்கீடு மிகக் குறைவாகவே இருந்த, உணவுப் பயிர்களுக்கு முன்னுரிமை அளித்து வந்த நிலையில், இப்போது பருத்தி ஆராய்ச்சிக்கு இந்திய அரசு ரூ.2500 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய உள்ளது.
இது இந்தியாவின் பருத்தி விளைச்சலை இரட்டிப்பாக்குவதற்கு மிகவும் உதவியாக அமையும். மேலும் சிறந்த ஆராய்ச்சி, தொழில்நுட்பம் மற்றும் செயல்படுத்தல் மூலம், எதிர்காலத்தில் இந்தியாவுக்கு 500 லட்சம் பேல்கள் விளைவிகள் என்பது எளிதில் சாத்தியப்படும்’’ இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் பேசிய துணைத் தலைவர் பி. நடராஜ் கூறியதாவது, ‘‘உலகளாவிய போட்டி, வரித் தடைகள் மற்றும் செயற்கை இழை எழுச்சி ஆகியவை பருத்தி துறைக்கு பெரும் சவால்கள் தான். அதே நேரத்தில், நீடித்த நிலைத்தன்மை, இயற்கைத் துணிகள் மேல் உலக அளவில் வாடிக்கையாளர்கள் காட்டும் ஆர்வம் மிகப் பெரிய வாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.
இந்த இடத்தில் தான் இந்தியா தனக்கான பெருமிடத்தை பெற அனைத்து முயற்சிகளை முன்னெடுக்கவேண்டும். நாம் தொடர்ந்து தரத்தை மேம்படுத்தி, செயல்திறனை அதிகரித்து, உலக நாடுகள் எதிர்பார்க்கும் நீடித்த நிலைத்தன்மை தரங்களுக்கு இணையாகச் செயல்பட்டால், இந்தியப் பருத்தி மற்றும் ஜவுளிகள் சர்வதேச வாடிக்கையாளர்களின் விருப்பமான தேர்வாக மாறும்.
நமது கூட்டமைப்பு இனி வரும் காலங்களில் அரசுடன் தொடர்புகளை வலுப்படுத்த இலக்கு வைக்கும். இந்தியப் பருத்திக்குத் உரிய ஆதரவு கிடைப்பதை உறுதிசெய்ய, கொள்கை வகுப்பாளர்களுடன் நேரடித் தொடர்புகளை விரிவுபடுத்துவோம்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.