நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை விதிகளை அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு
டெல்லி: நாடு முழுவதற்கும் ஒரே மாதிரியான ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை விதிகளை அமல்படுத்த ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. வீடு, மனை விற்பனையில் உருவாகும் பிரச்னைகளை தீர்க்க 2016ல் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை சட்டத்தை ஒன்றிய அரசு நிறைவேற்றியது. இதன் பின் ஒவ்வொரு மாநிலத்திலும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையமும், மேல்முறையீட்டு தீர்ப்பாயமும் ஏற்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் ஒரே மாதிரியான ரியல் எஸ்டேட் சட்டம் அமலில் இருந்தாலும் அவற்றின் ஒழுங்கு முறை விதிகளில், மாநிலத்திற்கு மாநிலம் வேறுபாடு காணப்படுகிறது. உதாரணமாக ஒரு கட்டுமான நிறுவனம் வீட்டை ஒப்படைக்க தாமதம் செய்யும் நிலையில், இழப்பீடு வழங்க ஆணையம் உத்தரவிடுகிறது.
அந்த உத்தரவை கட்டுமான நிறுவனம் செயல்படுத்தாத நிலையில், இழப்பீட்டை வசூலிப்பதில் ஹரியானா மாநிலத்தில் கைது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. பிற மாநிலங்களில் இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை எனவே ரியல் எஸ்டேட் துறையில் ஒருங்கிணைப்பை ஏற்படுத்த நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஒழுங்கு முறை விதிகளை பின்பற்ற வேண்டிய தேவை எழுந்து உள்ளது. இந்த விவகாரம் குறித்து அண்மையில் டெல்லியில் நடைபெற்ற தேசிய ரியல் எஸ்டேட் மேம்பாட்டு கவுன்சிலின் தேசிய மாநாட்டில் ஆலோசிக்கப்பட்டது.