வேலையில்லாமை வறுமை அதிகரித்தால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்: ப.சிதம்பரம்
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியில் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் நூல்களை வெளியிட்டு பேசியதாவது: கடந்த 2, 3 ஆண்டுகளாக நாட்டில் விபரீதமான போக்கு ஏற்பட்டுள்ளது. தொழில்துறை, சேவைதுறையில் வேலைவாய்ப்புகள் குறைந்ததால் கிராமங்களில் இருந்து நகர்ப்புறங்களை நோக்கி சென்றவர்கள் தற்போது மீண்டும் கிராமங்களை நோக்கி வரும் நிலை உருவாகி உள்ளது. இலங்கை, மியான்மர், நேபாளத்தில் புரட்சி வெடித்துள்ளது.
புரட்சிக்கும் மதத்திற்கும் சம்பந்தம் கிடையாது. புரட்சி என்பது பசித்த வயிறு காரணமாக வெடித்தது. வேலையில்லாமை, பசி, வறுமை, வீடு இல்லாததால் புரட்சி வெடித்தது. இதுதான் புரட்சிக்கு வித்து. இதனை மதத்துடன் சம்பந்தப்படுத்துவது அவசியம், தேவை கிடையாது. அதுபோன்று இந்தியாவில் நடக்காமல் இருக்க காரணம், நாம் இன்றும் ஜனநாயக நாடாக உள்ளோம். எந்த நாட்டிலும் புரட்சி வெடிக்கும். இந்தியாவில் புரட்சி வெடிக்காது என நினைக்க வேண்டாம். பசி, வேலையில்லாமை, வறுமை அதிகரித்து விட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும். எப்போது வெடிக்கும்? எங்கு வெடிக்கும்? யார் தலைமை தாங்குவார்கள் என்று கூற முடியாது. இவ்வாறு அவர் பேசினார்.