யுஎன்டிபியின் பிராண்ட் தூதர்களாக 6 தமிழக மாணவர்கள் தேர்வு
சென்னை: ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் (யுஎன்டிபி) தமிழகத்தை சேர்ந்த 6 மாணவ, மாணவியர் பிராண்ட் தூதர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை: ஐக்கிய நாடுகள் பொருளாதார மற்றும் சமூக கூட்டமைப்பால் அங்கீகரிக்கப்பட்டுள்ள நிலையான வளர்ச்சிக் கவுன்சில் சார்பில் 5வது சர்வதேச இளைஞர் மன்றத்தை, தாய்லாந்து- பாங்காங்கில் உள்ள ஐக்கிய தேசிய மாநாட்டு மையம், ஆசிய பசிபிக் தலைமையகத்தில் 2025 ஆகஸ்ட் 21 மற்றும் 22ம் தேதிகளில் நடத்தியது.
இந்த மாநாட்டில் இந்தியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து பள்ளி மாணவர்களும், 62 நாடுகளில் இருந்து 600 பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். மாணவர்களை பொறுத்தவரையில் 13 முதல் 17 வயது வரையும் (வகுப்பு 8 முதல் பிளஸ் 1 வரை), 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவியர், மாணவர்களுடன் செல்ல ஒரு வழிகாட்டி ஆசிரியர், இருக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் தமிழகத்தில் இருந்து 3 மாணவர்கள் மற்றும் 3 மாணவியர், ஒரு ஆசிரியர் என 7 பேர் அரசுப் பள்ளிகள் சார்பில் பள்ளிக் கல்வித்துறையால் தேர்வு செய்யப்பட்டனர்.
அதன்படி, வேலூர் மாணவி நந்தினி, தஞ்சாவூர் தரணிஸ்ரீ, நாமக்கல் யாழினி, சேலம் அஷ்வாக், நாமக்கல் கமலேஷ், செங்கல்பட்டு ராகுல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாணவ, மாணவியர் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு திட்டத்தின் மூலம் பிராண்ட் தூதராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இந்த திட்டத்தின் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கிறது. மேலும், இந்த மாணவர்கள் சர்வதேச அளவில் பிராண்ட் தூதராக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளின் செயல்பாடுகளுக்கு கிடைத்த மிகச் சிறந்த வெற்றி.