பாதாள சாக்கடையை சுத்தம் செய்த போது விஷவாயு தாக்கி ஒப்பந்த ஊழியர் பலி: மயக்கமடைந்த மேலும் இருவர் மருத்துவமனையில் அனுமதி
பெரம்பூர்: கொளத்தூர், 66வது வார்டு, திருப்பதி நகர் 1வது பிரதான சாலை விரிவு 3வது குறுக்கு தெருவில் நேற்று மதியம் 2 மணி அளவில், ஒப்பந்த ஊழியர்கள் 3 பேர், பாதாள சாக்கடை மேன்ஹோலை திறந்து, சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த குப்பன் (37) என்பவர் முதலில் பாதாள சாக்கடைக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி மயங்கி விழுந்தார்.
அவரை காப்பாற்றுவதற்கு அவரது உறவினரான அதே ஊரை சேர்ந்த சங்கர் (40) மற்றும் வானகரம் பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த சூப்பர்வைசர் ஹரிஹரன் (28) ஆகியோர் முயன்ற போது, அவர்களும் விஷவாயு தாக்கி மயக்கமடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் சங்கர் மற்றும் சூப்பர்வைசர் ஹரிஹரன் இருவரையும் மீட்டு பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
குப்பன் கழிவுநீர் குழாய்க்குள் சிக்கியதால் அவரை மீட்க முடியவில்லை. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கொளத்தூர் தீயணைப்பு துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி குப்பனை சடலமாக மீட்டனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. உயிரிழந்த குப்பனுக்கு சங்கீதா என்ற மனைவியும், ஜானகி (15), பார்த்திபன் (14) என்ற மனும் உள்ளனர்.
பெரம்பூரை சேர்ந்த தனியார் நிறுவனம், வெளியூரில் இருந்து ஆட்களை அழைத்து வந்து பாதாள சாக்கடையை சுத்தம் செய்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள ஹரிஹரன் என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து கொளத்தூர் போலீசார் விசாரிக்கின்றனர்.