பூமிக்கடியில் கிடைத்த பொருட்கள், கடல் படிமங்கள்... தூத்துக்குடி பகுதியில் புதையலா?.. தொல்லியல் ஆர்வலர் தகவலால் நடவடிக்கை எடுக்க புவியியல் ஆய்வு மையத்திற்கு கலெக்டர் கடிதம்
நெல்லை: தூத்துக்குடி அருகே உள்ள பட்டினமருதூர் மற்றும் பனையூர் பகுதிகளில் நீருக்கு அடியில் புதையல்கள் மற்றும் கடல்வாழ் உயிரினங்களின் படிமங்கள் இருப்பதாகக் கூறி, தொல்லியல் ஆர்வலர் ராஜேஷ் என்பவர் அளித்த மனு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கலெக்டர் இளம்பகவத் கொல்கத்தாவில் உள்ள இந்திய விலங்கியல் மற்றும் புவியியல் ஆய்வு மையங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். மறைக்கப்பட்ட புதையல்கள், தொலைந்து போன நகரங்கள், கடலுக்குள் மூழ்கிய ரகசியங்கள் பற்றிய கதைகள் எப்போதும் நமக்கு ஒருவிதமான சிலிர்ப்பை ஏற்படுத்தும். அப்படியான ஒரு பிரம்மாண்டமான தேடலுக்கு, தூத்துக்குடி தயாராகி வருகிறது. தூத்துக்குடியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஒரு தொல்லியல் ஆர்வலர். இவர் தூத்துக்குடியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மேற்பரப்பு கள ஆய்வு செய்து அதன் தொன்மைகளை வெளியிட்டு வருகிறார்.
இந்த நிலையில் தூத்துக்குடியில் பட்டினமருதூர் உள்ளிட்ட இடங்களில் மேற்பரப்பு கள ஆய்வு செய்து, அதில் கிடைத்த தொன்மையான பொருட்களை வெளியிட்டார். அதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திற்கும் அறிக்கையாக சமர்பித்தார். இந்தநிலையில் பட்டினமருதூர், பனையூர் உள்ளிட்ட இடங்களில் கிடைத்த தொல்பொருள் எச்சங்களை கொண்டு ஒரு அறிக்கையாக தயார் செய்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அதில், தூத்துக்குடி-பட்டினமருதூர் சர்வே எண்கள் 200, 203, 204 மற்றும் தூத்துக்குடி-பனையூர் (குளத்தூர் தெற்கு கிராமம்) அணைக்கட்டு சர்வே எண்கள் 215, 435 ஆகியவற்றின் கீழ் உள்ள பகுதிகளில் நீருக்கு அடியில் கட்டமைப்புகள், சிப்பிகள் மற்றும் சங்குகள் போன்ற கடல் படிமங்கள் மற்றும் மிகப்பெரிய புதையல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவைப் பெற்ற மாவட்ட கலெக்டர் இளம்பகவத், இதுகுறித்து உரிய ஆய்வு நடத்தி உண்மையை கண்டறிய வேண்டும் என்று கோரி, இந்திய விலங்கியல் ஆய்வு மையத்தின் இயக்குநர் மற்றும் இந்திய புவியியல் ஆய்வு மையத்தின் (ஜிஎஸ்ஐ) இயக்குநர் ஆகியோருக்கு கடந்த நவம்பர் 25ம் தேதியிட்ட கடிதத்தை அனுப்பியுள்ளார். மேலும், ராஜேஷ் அளித்த மனு மற்றும் அது தொடர்பான புகைப்பட ஆல்பம் அடங்கிய இரண்டு கையேடுகளையும் அத்துடன் இணைத்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். புதையல் இருக்கலாம் என்ற மனுவாலும், அதுகுறித்து ஆய்வு நடத்த வேண்டும் என கலெக்டர் அனுப்பிய கடிதம் தொடர்பான விவகாரமும் வெளியாகி தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாதாரணமாக இதுபோன்ற மனுக்கள் அரசு அலுவலகங்களில் முடங்கிவிடும் அபாயம் உண்டு.
ஆனால், மாவட்ட ஆட்சியரே நேரடியாகத் தலையிட்டு, மனுவை இந்தியாவின் உயரிய ஆய்வு மையங்களுக்குப் பரிந்துரைத்திருப்பது, இந்தக் கோரிக்கையின் ஆதாரங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படவில்லை என்பதையும், இதன் தீவிரத்தன்மை முழுமையாக உணரப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்தி உள்ளது. இதனால், இந்த விவகாரம் உள்ளூர் அளவைத் தாண்டி, தேசிய நிபுணர்களின் கைகளுக்குச் செல்ல உள்ளது என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்திய விலங்கியல் ஆய்வு மையம் மற்றும் இந்திய புவியியல் ஆய்வு மையம் ஆகியவை இந்தியாவின் முதன்மையான அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்களாகும்.
அதாவது, ஒரு அமைப்பு கடலுக்குள் புதைந்துள்ள காலத்தின் சாட்சியங்களான படிமங்களின் கதையை ஆராயும்; மற்றொரு அமைப்பு, அந்தப் பகுதியின் நிலவியல் வரைபடத்தையே படித்து, மறைந்துள்ள கட்டமைப்புகளின் ரகசியங்களை வெளிக்கொணரும். அதனால் இந்த அமைப்புகளின் ஆய்வு இந்திய அறிவியலின் இருபெரும் கரங்களால் நடத்தப்பட வாய்ப்பு அதிகரித்துள்ளது. எனவே, இது வெறும் புதையல் தேடும் முயற்சி அல்ல; மாறாக, அறிவியல் பூர்வமாக உண்மையை ‘கண்டறிய வேண்டும்’ என்ற நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் ஒரு முயற்சி என தொல்லியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.