தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கட்டுப்பாடில்லாத ரசிகர்களால் கரூரில் கடும் நெரிசல்: விஜய் பிரசாரத்தில் 38 பேர் பலி; 16 பெண்கள், 8 குழந்தைகள் உயிரிழந்த சோகம்

* 20 பேர் கவலைக்கிடம்

Advertisement

* 6 மணி நேரம் தாமதமாக பிரசாரம் தொடங்கியதால் தண்ணீர், உணவின்றி தவிப்பு

கரூர்: கரூரில் விஜய் பிரச்சாரம் செய்யும்போது, ரசிகர்கள் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள், 16 பெண்கள் உட்பட 36 பேர் பலியானார்கள். உயிருக்கு ஆபத்தான நிலையில் 30 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிரசாரத்துக்கு விஜய் 6 மணி நேரம் தாமதமாக வந்ததாலும், உணவு, குடிநீர் இன்றி தவித்ததாலும், கூட்ட நெரிசலில் சிக்கி, இந்த கொடூரம் அரங்கேறி உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகும் வகையில் தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரத்தை கடந்த 13ம் தேதி முதல் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துவதாக அறிவித்தார்.

முதல்கட்டமாக திருச்சியில் அவரது பிரசாரத்தை தொடங்கினார். திருச்சி பிரசாரத்துக்கு போலீசார் பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். குழந்தைகள், கர்ப்பிணிகளை அழைத்து வரக்கூடாது, மரங்கள், மின்கம்பங்கள், கட்டிடங்கள் மீது ஏறக்கூடாது, வாகனங்களை பின் தொடர கூடாது, குடிநீர், ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதித்து இருந்தனர். ஆனால், இந்த நிபந்தனைகளை விஜய் ரசிகர்கள் யாரும் பின்பற்றவில்லை. அவரை பார்ப்பதற்காக ரசிகர்கள், தொண்டர்கள் பெருமளவில் திரண்டனர். திருச்சி விமான நிலையத்தில் குவிந்த ரசிகர்கள், பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அங்கிருந்த தடுப்புகளை உடைத்து சேதப்படுத்தினர்.

விமான நிலையத்தில் இருந்து திருச்சி மரக்கடைக்கு பிரசாரத்துக்கு பிரசார சொகுசு பஸ்சில் விஜய் சென்றார். அப்போது, தொண்டர்கள் வேண்டுமென்றே பஸ்சின் முன்பக்க பகுதியில் நின்று இடையூறு ஏற்படுத்தி வாகனம் செல்ல முடியாதபடி செய்தனர். இதனால் அவரது பிரசார பஸ் ஊர்ந்தபடியே சென்றது. விஜய் ரசிகர்கள் அட்டூழியத்தால் திருச்சி மாநகரில் அன்று போக்குவரத்து ஸ்தம்பித்தது. சாலைகளை விஜய் ரசிகர்கள் ஆக்கிரமித்ததால் பஸ்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். மரக்கடையில் குவிந்த ரசிகர்கள் அங்கிருந்த கடைகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி திருடி சென்றனர்.

இதுதொடர்பாக, திருச்சி போலீசில் புகார் அளித்த வியாபாரிகள், விஜய் ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி போராட்டம் நடத்தினர். அரியலூர், பெரம்பலூரிலும் கட்டுப்பாட்டை மீறி ரசிகர்கள் குவிந்து மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர். நேரம் கடந்ததால் பெரம்பலூரில் பிரசாரம் செய்யாமல் விஜய் சென்றார். அதை தொடர்ந்து 20ம் தேதி சனிக்கிழமை நாகை மற்றும் திருவாரூரில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அவரது பிரசார திட்டத்தில் காவல்துறையினர் பல்வேறு நிபந்தனைகளை விதித்தனர். கூட்டத்தினருக்கு குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்றெல்லாம் வலியுறுத்தினர். ஆனால் விஜய்யும் அவரது கட்சியினரும் தங்களுக்கு மட்டுமே நிபந்தனைகள் விதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினர்.

போலீசாரின் நிபந்தனைகளுக்கு கட்டுப்படாமல் மரங்களின் மீதும், கோபுரங்களின் மீதும், கட்டிடங்களின் மீதும், மின் கம்பங்களின் மீதும் ஆபத்தான முறையில் ஏறி நின்று ரசிகர்களும், தொண்டர்களும் விஜய்யை பார்த்தனர். விஜய்யும் கர்ப்பிணிகள், குழந்தைகளை கூட்டத்திற்கு அழைத்து வராதீர்கள் என்று அறிக்கை விட்டார். அதையும் ரசிகர்கள் கேட்காமல் கைக்குழந்தைகள், கர்ப்பிணிகள் என்று அழைத்துக் கொண்டு எந்த விதிமுறைகளையும் பின்பற்றாமல் திரண்டனர். போலீசார் அனுமதி கொடுத்த நேரத்தில் வராமல் பல மணி நேரம் தாமதமாக விஜய் பிரசார இடத்திற்கு வந்ததால் காத்திருந்த கூட்டத்தினர் வெயிலில் மயங்கி விழுவதும் நடந்தது.

மேலும் ஒரு இடத்தில் இருந்த மற்ற இடத்துக்கு பிரச்சாரத்துக்கு விஜய் செல்லும்போது, ரசிகர்களும் கார், இரு சக்கர வாகனங்களில் பின்தொடர்ந்து செல்கின்றனர். ஆயிரக்கணக்கானவர்கள் பின் தொடர்ந்து செல்வதால், ஒவ்வொரு இடத்திலும் தள்ளு, முள்ளு ஏற்பட்டு வந்தது. இதற்கிடையே, விஜய் பிரசாரத்துக்கு எந்தவித பாரபட்சமின்றி அனுமதி வழங்கக்கோரி தவெக சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம், எல்லா கட்சிகளுக்கும் விதிக்கப்படும் நிபந்தனைகள்தான் இது. அசம்பாவிதங்கள் ஏதேனும் நடந்தால் யார் பொறுப்பு? நீங்கள் பொறுப்பேற்பீர்களா.

கூட்டத்தை நீங்கள் தானே கட்டுப்படுத்த வேண்டும் என்று விஜய்க்கு சரமாரியாக கேள்வி எழுப்பியது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் பிரசாரம் அறிவிக்கப்பட்டது. நாமக்கலில் காலை 8.45 மணிக்கு விஜய் பேசுவதற்கு நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், விஜய் சென்னையில் இருந்தே 8.45 மணிக்குதான் தனி விமானத்தில் திருச்சிக்கு புறப்பட்டார். அங்கிருந்து காரில் புறப்பட்டு நாமக்கல் எல்லையில் சொகுசு பஸ்சில் ஏறி பிரசாரத்துக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கு பகல் 2.45 மணிக்குதான் வந்து சேர்ந்தார். இதனால் 6 மணி நேரத்துக்கும் மேலாக வெயிலில் காத்திருந்த ரசிகர்கள், குழந்தைகள், பெண்கள் 20க்கும் மேற்பட்டோர் மயங்கி விழுந்தனர்.

கரூரில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறையிடம் அனுமதி கேட்டனர். அப்போதும் வேலுச்சாமிபுரம் தவிர்த்து பாதுகாப்பான வேறு இடத்தில் பிரசாரம் செய்ய காவல்துறையினர் வலியுறுத்தினர். ஆனால், தவெகவினர் அதே இடத்தில் பிரசாரம் மேற்கொள்ள வற்புறுத்தி அனுமதி வாங்கியதாக கூறப்படுகிறது. காலை 8.45 மணிக்கு நாமக்கலிலும், நண்பகல் 12 மணிக்கு கரூர் வேலுச்சாமிபுரத்திலும் விஜய் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி அளித்திருந்தனர். ஆனால் நாமக்கலில் பிற்பகல் 2.45 மணிக்கு பிரசாரம் மேற்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து, கரூர் வேலுச்சாமிபுரத்தில் இரவு 7 மணிக்கு பிரசார சொகுசு பஸ்சில் விஜய் வந்தார். நாமக்கல்லில் இருந்து அவர் வரும்போது, அவருடன் 40 கார்கள் பின் தொடர்ந்து வந்தன. கரூர் எல்லையில் சுமார் 3 ஆயிரம் பேர் விஜய்க்கு வரவேற்பளித்தனர். அவர்களும் விஜய் காருடன் பின் தொடர்ந்து வந்தனர். கரூர் வேலுச்சாமிபுரத்தில் விஜய்யை பார்ப்பதற்காக காலை 6 மணியில் இருந்தே ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும் குவியத்தொடங்கினர். நேரம் ஆக ஆக... கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. ஆனால் அதிக அளவில் கூடும் மக்களுக்கு வழங்க தேவையான தண்ணீர் கூட தவெக நிர்வாகிகள் ஏற்பாடு செய்யவில்லை.

வேலுச்சாமிபுரம் குறுகிய பகுதி என்பதால் கடும் கூட்டநெரிசல் ஏற்பட்டது. கூட்டத்தில் இருந்தவர்கள் விஜய்யை பார்க்க முண்டியடித்ததால் பெரிய தள்ளுமுள்ளும் ஏற்பட்டது. குடிநீர், உணவு இன்றி தவித்த குழந்தைகள், பெண்கள் மயங்கி விழத் தொடங்கினர். இந்நிலையில் இரவு 7.14 மணிக்கு விஜய் பேசத்தொடங்கினார். பேசத்தொடங்கிய உடனே மைக் சரியாக வேலை செய்யவில்லை என குறைகூறிய அவர், ஹலோ.... ஹலோ.... என என்ன பேசுவது என்று தெரியாமல் திணறி உளறினார். அப்போது வாலிபர் ஒருவர் மயக்கமடைந்து கீழே விழுந்தார். உடனடியாக அவரை ஆம்புலன்சில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு விஜய் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து, 7.24 மணிக்கு விஜய் மீண்டும் பேச தொடங்கிய போது கூட்டத்தில் இருந்த மஞ்சள் நிற சுடிதார் அணிந்த பெண் ஒருவர், கண்ணீருடன் தனது குழந்தையை காணவில்லை என விஜய்யை நோக்கி கதறி அழுதார். ஆனால் விஜய் உட்பட யாரும் அதை கண்டு கொள்ளவில்லை. அந்த நேரத்தில் அந்த பெண் கதறி அழுதது காண்போரை கண்கலங்க செய்தது. அதேநேரத்தில் அவரது பஸ் அருகே கூட்டம் முண்டியடித்து முன்னேறினர். இதனால் ஒரு கட்டத்தில் தள்ளு, மள்ளு ஏற்பட்டதோடு பலர் மயங்கி விழுந்தனர். ஆம்புலன்சும் வரத் தொடங்கியது. பலர் அதில் ஏற்பட்டனர்.

இதனால் பஸ்சில் இருந்து விஜய் மற்றும் ஆதவ் அர்ஜூனா ஆகியோர் தண்ணீர் பாட்டிலை எடுத்து வீசினர். அவர் ஏதோ பரிசு பொருளை வீசுகிறார் என்று கருதி மேலும் பலர் அவர் இருந்த பஸ் அருகே நெருங்க ஆரம்பித்ததால், கூட்டம் திணற ஆரம்பித்தது. இதனால் ஒரு கட்டத்தில் இரவு 7.31 மணிக்கு விஜய் பாதியிலேயே பேச்சை முடித்த போது காணாமல் போன அஷ்மிகா (8) என்ற குழந்தையை கண்டுபிடித்து தருமாறு விஜய் கேட்டுக்கொண்டார். பின்னர் ஒரு வரி சொன்ன உடன் தேங்க்யூ நண்பா... எனக்கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சாலை வழியாக திருச்சி விமான நிலையம் சென்றார்.

சுமார் 10 நிமிடங்கள் விஜய் பேசி முடித்துவிட்டு சென்ற பிறகு அந்த இடமே போர்க்களம் போல் இருந்தது. 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தும், மயக்கமடைந்தும் மரண ஓலம் விட்டு கிடந்தனர். எங்கு பார்த்தாலும் செருப்புகள் சிதறிக் கிடந்தன. ஆம்புலன்ஸ் அலறியபடியே இருந்தன. அவர் வந்த பஸ் அருகே ஜெனரேட்டர் வைத்திருந்த பகுதிக்கு வந்தபோது சிலர் மைக்கில், கரண்ட் இருக்கும் பகுதிக்கு வரவேண்டாம் என்று கூறினார். ஆனால் முண்டியடித்த கூட்டம் தடுப்புகளை உடைத்துக் ெகாண்டு கீழே விழுந்தனர். ஒருவர் மீது ஒருவர் விழுந்ததோடு, பலர் அவர்களை ஏறி மிதித்து விட்டனர்.

இதனைபார்த்து பதறிய காவல்துறையினர் 10க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்களை வரவழைத்து மயங்கி கிடந்த அனைவரையும் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள், 16 பெண்கள் உள்பட 38 பேர் உயிரிழந்ததாக தெரிகிறது. இதில் பெரும்பாலானோர் மருத்துவனைக்கு கொண்டு வந்தபோதே உயிரிழந்தே கொண்டு வரப்பட்டதாக தகவல் தெரிகிறது. மேலும், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 3 குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரிகிறது.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த எம்எல்ஏ செந்தில் பாலாஜி மருத்துவமனைக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்குமாறு மருத்துவர்களை அறிவுறுத்தினார். மேலும், திருச்சி உள்ளிட்ட மற்ற மாவட்டங்களில் இருந்து ஏராளமான மருத்துவக்குழுவினர் கரூர் விரைந்து செல்லுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் உத்தரவிட்டார். தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், அன்பில் மகேஷ் உள்ளிட்ட அமைச்சர்கள் கரூர் விரைந்தனர். மேலும், சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் ஏற்படுவதை தவிர்க்கும் வகையில் சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் கரூர் விரைந்து வந்தார். மேற்கொண்டார். விஜய் அரசியல் பிரசாரத்தில் 8 குழந்தை உட்பட 38 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

* இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நீதி விசாரணைக்கு முதல்வர் உத்தரவு

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கை: கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் பரப்புரை கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 8 குழந்தைகள் 16 பெண்கள் உட்பட 36 பேர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல் அறிந்து சொல்லொண்ணாத் துயரமும் வேதனையும் அடைந்தேன். விலைமதிக்க முடியாத அந்த உயிரிழப்புகள் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்கியுள்ளது. ஈடு செய்ய முடியாத பேரிழப்பை எதிர்கொண்டுள்ள அந்தக் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும். அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் சிறப்பான முறையில் சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளேன். மருத்துவ சிகிச்சைக்கான சிறப்பு ஏற்பாடுகளை துரிதப்படுத்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஆகியோரை அனுப்பி வைத்துள்ளேன். மேலும், திருச்சி, சேலம் மற்றும் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மருத்துவக் குழுக்களுடன் கரூருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த துயரகரமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா பத்து லட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு தலா 1 லட்சம் ரூபாயும் வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும் இச்சம்பவம் குறித்து முறையான விசாரணை மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் உடனடியாக அமைக்கப்படும். நான் இரவே கரூர் சென்று மேற்படி துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து, ஆறுதல் தெரிவிக்கவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்திக்கவும் உள்ளேன். இவ்வாறு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

* கரூர் செய்தி கவலையளிக்கிறது போர்க்கால அடிப்படையில் தேவையான உதவி செய்ய உத்தரவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு

முதல்வர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ்தள பதிவு: கரூரிலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி மயக்கமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்குத் தேவையான உடனடி சிகிச்சைகளை அளித்திடும்படி முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி, அமைச்சர் மா.சுப்பிரமணியன், மாவட்ட ஆட்சியரையும் தொடர்பு கொண்டு அறிவுறுத்தியுள்ளேன். அருகிலுள்ள திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ் போர்க்கால அடிப்படையில் தேவையான உதவியினைச் செய்து தரும்படி உத்தரவிட்டிருக்கிறேன். அங்கு விரைவில் நிலைமையைச் சீராக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள ஏடிஜிபியிடமும் பேசியிருக்கிறேன். பொதுமக்கள், மருத்துவர்களுக்கும், காவல்துறைக்கும் ஒத்துழைப்பு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு பதிவில் கூறியுள்ளார்.

* ஜனாதிபதி, பிரதமர் இரங்கல்

ஜனாதிபதி திரவுபதி முர்மு எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தமிழ்நாட்டின் கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் போன்ற துரதிர்ஷடவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் துயர செய்தி அறிந்து வேதனை அடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘தமிழ்நாட்டின் கரூரில் நடந்த அரசியல் பேரணியின் போது நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் மிகவும் வருத்தம் அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. இந்த கடினமான நேரத்தில் அவர்களுக்கு வலிமை கிடைக்க பிரார்த்திக்கிறேன். காயமடைந்த அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.

* துபாயில் இருந்து திரும்பும் உதயநிதி ஸ்டாலின்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், தனது மனைவி கிருத்திகாவுடன் நேற்று காலையில் துபாய் புறப்பட்டுச் சென்றார். சொந்த பயணமாக அவர் சென்றிருந்தார். கரூரில் துயரச் சம்பவம் நடந்த தகவல் கேள்விப்பட்டதும், உதயநிதி ஸ்டாலின் உடனடியாக கரூர் திரும்புகிறார்.

* பறந்து சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின்; சத்தம் இல்லாமல் சென்னை திரும்பிய விஜய்

கரூரில் இரவு 7.15 மணிக்கு தள்ளு,முள்ளு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டவுடன், தனது பிரச்சாரத்தை பாதியிலேயே முடித்துக் கொண்டு திருச்சிக்கு 3 காரில் மாறி, மாறி வந்தார். திருச்சியில் இருந்து 11 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு சென்னை வந்தார். விமானநிலையத்தில் நிருபர்கள் கேள்வி கேட்டபோது பதில் ஏதும் தெரிவிக்காமல் வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். அதேநேரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் வீட்டுக்குச் சென்று 1 மணிக்கு தனி விமானத்தில் சென்னையில் இருந்து புறப்பட்டார். 2 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். 3 மணிக்கு கரூர் மருத்துவமனைக்கு சென்றார்.

* நடிகர் அல்லு அர்ஜூன்போல விஜய் மீது வழக்குப்பதிவு?

தெலங்கானா மாநிலத்தில் ‘புஷ்பா-2’ திரைப்படம் ரிலீஸ் செய்தபோது ஐதராபாத் தியேட்டரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் பலியானார். இந்த வழக்கில், நடிகர் அல்லு அர்ஜுன் சம்பவ இடத்தில் இருந்ததால் அவர் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை போலவே, விஜய்யை பார்க்க அவர் வந்த பஸ் அருகே தொண்டர்கள் நெருங்கி வந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அவர் பேசிக் கொண்டிருந்தபோதே ஆம்புலன்ஸ் சென்ற வீடியோக்களும் வெளியாகியுள்ளன. அவரும் தண்ணீர் பாட்டிலை கூட்டத்தில் தூக்கி வீசினார். இதனால், நடிகர் விஜய் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

* நெஞ்சை உலுக்குகிறது - ரஜினி, கமல் உருக்கம்

நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘கரூரில் நிகழ்ந்திருக்கும் அப்பாவி மக்களின் உயிரிழப்புச் செய்தி நெஞ்சை உலுக்கி மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தோருக்கு ஆறுதல்கள்’ என்று கூறி உள்ளார்.

மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன். நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

* முட்டாள்தனமானது: விஜய் மீது விஷால் தாக்கு

நடிகர் விஷால் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘நடிகர் விஜய்யின் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பது மனவேதனை அளிக்கிறது. இது முழு முட்டாள்தனம். உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையட்டும். அவர்களது குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களின் கட்சியால் முடிந்த குறைந்த பட்சம் இறந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று எனது அன்பான வேண்டுகோள் இனி வரும் காலங்களில் நடைபெறும் அரசியல் கூட்டங்களில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இருக்கும் என நம்புகிறேன்’ என்று கூறி உள்ளார்.

Advertisement

Related News