ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் ஒத்துழைக்க மறுத்தால் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடை!!
டெஹ்ரான் : ஐ.நா. அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் ஒத்துழைக்க மறுத்தால் ஈரான் மீது மீண்டும் பொருளாதார தடைகள் விதிக்கப்படும் என்று ஐரோப்பிய நாடுகள் எச்சரித்துள்ளன. பிரிட்டன், பிரான்ஸ், ஜேர்மனி ஆகிய 3 நாடுகள் சார்பில் ஐ.நா.சபைக்கு அனுப்பிய கடிதத்தில் ஈரான், அணு ஆயுதம் உருவாக்குவதை தடுக்க ராஜ்ய ரீதியிலான நடவடிக்கைகள் தொடரும் என்று கூறப்பட்டுள்ளது. இம்மாத இறுதிக்குள் மேற்கத்திய நாடுகளுடன் ஈரான் புதிய அணுசக்தி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது.
ஐநாவின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடன் ஒத்துழைப்பு மேற்கொள்ளாவிட்டால், அந்நாட்டின் மீது 2015ம் ஆண்டிலிருந்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகள் மீண்டும் அமல்படுத்தப்படும் என எச்சரித்துள்ளன. ஈரான் நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபையின் அணுசக்தி கண்காணிப்பு அமைப்புடனான ஒத்துழைப்பை நிறுத்தி வைக்கும் மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளது. குறிப்பாக, இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா அதன் அணுசக்தி நிலையங்கள் மீது நடத்திய சமீபத்திய வான்வழித் தாக்குதல்களைக் காரணம் காட்டி இந்த முடிவை ஈரான் எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.