ஐநா காலநிலை மாநாட்டில் பயங்கர தீ ஒன்றிய அமைச்சர் உயிர் தப்பினார்: 21 பேர் காயம்
பெலெம்: பிரேசில் நாட்டில் உள்ள பெலேம் நகரில் ஐநா காலநிலை உச்சி மாநாடு 10ம் தேதி தொடங்கியது. மாநாடு நிறைவடைவதற்கு முந்தைய நாளான நேற்று முன்தினம் மாநாட்டின் முக்கிய பகுதியான புளு ஸோனில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. உலகத் தலைவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த இடத்துக்கு அருகே அபாய எச்சரிக்கை ஒலி எழுந்தது. இதையடுத்து,பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள், செய்தியாளர்கள் என அனைவரும் வெளியேறினர். இறுதியில் அதிகாரிகள் அந்த இடத்தையே காலி செய்தனர். இதில் 21 பேர் காயமடைந்தனர்.
ஐநா பொது செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்சும் மாநாட்டில் கலந்து கொண்டார். ஐநா பாதுகாப்பு படை வீரர்கள் அவரை பாதுகாப்பாக வெளியே அழைத்து வந்தனர். இந்தியா சார்பில் பங்கேற்ற ஒன்றிய சுற்றுசூழல் அமைச்சர் பூபிந்தர் யாதவ் மற்றும் இந்திய குழுவினரும் மாநாட்டு கூடத்தை விட்டு உடனே வெளியேறினர் என்று சுற்றுசூழல் அமைச்சக செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார். இந்த தீவிபத்தில் 21 பேர் காயமடைந்து மருத்துவ சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிபத்தால் கிளம்பிய புகையை சுவாதித்தவர்களுக்கு அங்கேயே சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது, அவர்களின் நிலை கண்காணிப்பட்டு மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த தீ விபத்து கால நிலை உச்சி மாநாட்டின் முக்கிய விவாதங்களை தாமதப்படுத்தியுள்ளது. முக்கிய விஷயமான புதிய காலநிலை ஒப்பந்தம், பாரம்பரிய எரிசக்தி அகற்றல், நிதி உதவி போன்றவை இறுதி கட்டத்தில் இருந்தன. தீ அணைக்கப்பட்டதும், 6 மணி நேரத்துக்கு பின் மாநாடு மீண்டும் தொடங்கியதாக பிரேசில் அறிவித்துள்ளது.