எந்த நாடகமும் உண்மைகளை மறைக்க உதவாது: ஐ.நா. சபையில் பாகிஸ்தானுக்கு வலுவான பதிலடி கொடுத்த இந்தியா!!
நியூயார்க்: ஐக்கிய நாடுகள் சபையில் ஆபரேஷன் சிந்தூர் மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான மோதல் குறித்து பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துக்கு, ஐ.நாவுக்கு இந்திய தூதரகத்தின் முதன்மை செயலாளர் படால் கெலாட் அழுத்தமான பதிலடியை பதிவு செய்தார். ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுக்குழு கூட்டம் அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபையில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் 100க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார்.
இதனிடையே, ஐ.நா. பொதுக்குழு கூட்டத்தில் நேற்று பேசிய பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப், கடந்த மே மாதம் எந்த வித தூண்டுதலுமின்றி இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. நாங்கள் தக்க பதிலடி கொடுத்தோம். இந்தியாவை அவமானப்படுத்தி அனுப்பினோம். பஹல்காம் தாக்குதல் குறித்து சிறப்பு விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்று நான் கோரிக்கை விடுத்திருந்தேன். ஆனால், சர்வதேச சட்டவிதிகளை மீறி இந்தியா எங்கள் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுத்து 7 இந்தியா போர் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் என்றார்
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமரின் பேச்சுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. சபையில் ஐ.நா.வுக்கான இந்தியா முதன்மை செயலாளர் பட்டேல் கெலாட் கூறியதாவது; பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையாக பயங்கரவாதம் உள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் அபத்தமான நாடகங்களை இந்த கூட்டம் கண்டது. ஆபரேஷன் சிந்தூரின்போது பாகிஸ்தானின் செயல்பட்ட பயங்கரவாத முகாம்களை குறிவைத்து தாக்கினோம். ஆபரேஷன் சிந்தூரின் போது தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் ராணுவம் மன்றாடியது. பாகிஸ்தான் ராணுவ ஜெனரல் மட்டத்தில் மன்றாடி கேட்டதாலேயே தாக்குதலை நிறுத்தினோம். இந்தியா - பாகிஸ்தான் விவகாரத்தில் 3ம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை. பிரச்சினைகளை இருநாடுகளுமே பேசி தீர்த்துக்கொள்ளும். அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா பணியாது. இவ்வாறு அவர் கூறினார்.