உளுந்தூர்பேட்டையில் நள்ளிரவில் ஆய்வு அதிகம் ஒலி எழுப்பிய வாகனங்களுக்கு அமைச்சர் அபராதம்
உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை டோல்கேட் பகுதியில் தமிழ்நாடு போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று முன்தினம் நள்ளிரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது தனியார் ஆம்னி பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஒலி எழுப்பான்களில் அளவீடு செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார். ஒலியின் அளவு 90 என இருக்க வேண்டும்.
ஆனால் பரிசோதித்த அனைத்து வாகனத்திலும் 106, 107, 108 என இருந்ததால் அந்த வாகனங்களில் இருந்து ஒலி எழுப்பான்களை பறிமுதல் செய்ய அறிவுறுத்திய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஒலி மாசு ஏற்படுத்தியதற்காக அபராதமும் விதிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
பின்னர் அமைச்சர் சிவசங்கர் கூறுகையில், ‘‘பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய அளவீடு கண்டறியும் கருவி செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம் ஒலி அளவு 90 என்பதை 100க்கு மேல் இருந்தால் அந்த ஒலி எழுப்பான்கள் பறிமுதல் செய்யப்படும். தமிழ்நாடு முழுவதும் 250 கருவி மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மற்றும் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளரிடம் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் சோதனை நடத்தி விதியை மீறி இருந்தால் அபராதம் விதிப்பார்கள்’’ என்றார்.