உளுந்தூர்பேட்டை அருகே கிராம மக்கள் சாலை மறியல்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது கிளாப்பாளையம் கிராமம். இந்த கிராமத்திற்கு மெயின் ரோட்டில் இருந்து செல்லும் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை போடும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சாலை போடும் வழியில் இதே கிராமத்தை சேர்ந்த தனி நபர் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் சாலை போடப்படுவதாகவும் அந்த இடத்தில் சாலை போடக்கூடாது என்றும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாக கூறி சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தி உள்ளார்.
இந்த நிலையில் சுமார் மூன்று கிலோ மீட்டர் சாலையில் தற்போது கருங்கல் கொட்டப்பட்டு உள்ளதால் இதில் பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் நோயாளிகள் செல்வதில் கடும் சிரமம் ஏற்பட்டு வருவதால் சாலை போடும் பணியை துரிதப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கிராம மக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கிளாப்பாளையம் - உளுந்தூர் பேட்டை சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்து சென்ற உளுந்தூர்பேட்டை சப்இன்ஸ்பெக்டர் அன்பழகன் மற்றும் போலீசார் திருநாவலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் செந்தில் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில் அனைவரும் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலை மறியல் போராட்டத்தினால் உளுந்தூர்பேட்டை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.