உளுந்தூர்பேட்டை போலீசில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் 3 பிள்ளைகளுடன் தாய் தர்ணா போராட்டம்
*கள்ளக்குறிச்சியில் பரபரப்பு
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் 2 மகள், ஒரு மகன் என 3 பிள்ளைகளுடன் தாய் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த கள்ளக்குறிச்சி உதவி ஆய்வாளர்கள் ஏழுமலை, விஜயராகவன் மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் அந்த பெண் போராட்டத்தை கைவிட மறுத்து, எனது புகார் மனு மீது உளுந்தூர்பேட்டை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி கதறி அழுதபடியே தொடர்ந்து போராட்டத்தில் ஈடுப்பட்டார். பின்னர் போலீசார் சுமூக பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதையடுத்து அந்த பெண் தர்ணா போராட்டத்தை கைவிட்டார். இதனை தொடர்ந்து அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை நடத்தியதில், தனது பெயர் மகாலட்சுமி என்றும் உளுந்தூர்பேட்டை அடுத்த ஏமம் கிராமத்தை சேர்ந்தவர் எனவும் தனது கணவர் அருள் கடந்த 3 ஆண்டுகளாக குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து அடித்து துன்புறுத்தி வந்ததாகவும், இதுகுறித்து கடந்த 24.07.2025ம் தேதி உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்திலும் அதற்கு முன்னதாக உளுந்தூர்பேட்டை சட்டம் ஒழுங்கு காவல் நிலையத்திலும் புகார் கொடுத்தும் இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததால் மன உளைச்சலில் இருந்து வந்ததாகவும், தனது கணவர் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தனக்கு வேறு வழிதெரியாமல் தனது பிள்ளைகளுடன் போராட்டத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுபோன்று போராட்டத்தில் ஈடுபட கூடாது என போலீசார் அறிவுறுத்தி உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் தங்களது புகார் மனு மீது விரைந்து நடவடிக்கை எடுப்பார்கள் என கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பெண் மற்றும் அவரது பிள்ளைகளை போலீசார் அனுப்பி வைத்தனர்.
தனது கணவர் மீது போலீசில் கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை எடுக்காத உளுந்தூர்பேட்டை போலீசார்களை கண்டித்து ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் 3 பிள்ளைகளுடன் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.