உக்ரைன் போருக்கு பொறுப்பா? அமெரிக்கா குற்றச்சாட்டு அருவெறுப்பானது: யூதர்கள் அமைப்பு ஆதரவு
நியூயார்க்: ‘உக்ரைன் போருக்கு இந்தியா பொறுப்பல்ல. இதுதொடர்பான அமெரிக்க அதிகாரிகளின் குற்றச்சாட்டு அருவெறுப்பானது’ என அமெரிக்க யூதர்கள் குழு ஆதரவு தெரிவித்துள்ளது. ரஷ்யாவிடம் அதிக கச்சா எண்ணெய் வாங்குவதற்கு அபராதமாக இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் 25 சதவீத கூடுதல் வரியுடன் மொத்த வரியை 50 சதவீதமாக்கி உள்ளார். அவரது வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவேரா, ரஷ்யா-உக்ரைன் போரை மோடியின் போர் என்றும், இப்போரில் பல ஆயிரம் உயிர்கள் போவதற்கு இந்தியா முக்கிய காரணம் என்றும் குற்றம்சாட்டி உள்ளார்.
இந்நிலையில், அமெரிக்க யூதர்கள் ஆதரவு குழு வெளியிட்ட சமூக ஊடக பதிவில், ‘இந்தியா மீதான அமெரிக்க அதிகாரிகளின் வார்த்தை தாக்குதல்கள் கவலை அளிக்கின்றன. குறிப்பாக நவேராவின் குற்றச்சாட்டுகள் அருவெறுப்பானவை. இந்தியா ரஷ்ய எண்ணெயை நம்பியிருப்பதற்கு நாங்கள் வருந்துகிறோம். ஆனால் புடினின் போர் குற்றங்களுக்கு இந்தியா பொறுப்பல்ல. அமெரிக்காவின் முக்கியமான கூட்டாளியான இந்தியா, பெரும் வல்லரசு போட்டியில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே இந்தியாவுடனான உறவை மீட்டமைக்க வேண்டிய நேரம் இது’ என கூறி உள்ளது.