உக்ரைன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர புதின், ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் ஆலோசனை: விரைவில் ஹங்கேரியில் சந்திக்க ஏற்பாடு
வாஷிங்டன்: உக்ரைன் - ரஷ்யா இடையேயான போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமரச முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கிக்கும், ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையே கடுமையான தனிப்பட்ட விரோதம் நீடித்து வரும் சூழலில், இரு தலைவர்களையும் பேச்சுவார்த்தைக்கு சம்மதிக்க வைக்க முடியும் என டொனால்ட் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இஸ்ரேல் - காசா இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை வெற்றிகரமாக ஏற்படுத்தியதன் மூலம் கிடைத்துள்ள உத்வேகத்தை, இந்த விவகாரத்திலும் பயன்படுத்த முடியும் என டிரம்ப் கருதுகிறார். இது தொடர்பாக சமீபத்தில் அதிபர் புதினுடன் சுமார் இரண்டு மணி நேரம் தொலைபேசியில் உரையாடிய டிரம்ப், அந்த உரையாடல் மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாகக் குறிப்பிட்டார். இந்த ஆலோசனையின் தொடர்ச்சியாக, வரும் வாரங்களில் ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் புதினை நேரில் சந்தித்துப் பேசவும் இருவரும் ஒப்புக்கொண்டுள்ளனர்.
இந்தச் சமரசத்தில் ஜெலன்ஸ்கியின் முக்கிய கோரிக்கையாக, எதிர்காலத்தில் ரஷ்யாவின் ஆக்கிரமிப்பைத் தடுக்கும் வகையில், உக்ரைனுக்கு வலுவான மற்றும் நீடித்த பாதுகாப்பு உத்தரவாதங்களை வழங்குவதும் உள்ளது. மேலும், ரஷ்யாவுக்கு அழுத்தம் கொடுத்துப் போர் நிறுத்தத்திற்கு சம்மதிக்க வைக்க ‘டாமஹாக்’ போன்ற நீண்ட தூரம் பாயும் ஏவுகணைகள் அவசியம் எனவும் உக்ரைன் கருதுகிறது. ஆனால், ‘ஆயுதங்களை வழங்குவதன் மூலம் போரை நீட்டிப்பதை விட, பேச்சுவார்த்தை மூலமே இதற்குத் தீர்வு காண விரும்புகிறேன்’ என டிரம்ப் கூறியுள்ளார். அதேநேரம், ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகவும், ரஷ்யாவால் இணைக்கப்பட்ட தங்களது நாட்டுப் பகுதிகளை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் ஜெலன்ஸ்கி உறுதியாக உள்ளார். இதுவே இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் உள்ள மிகப் பெரிய தடையாகப் பார்க்கப்படுகிறது. டிரம்பின் இந்த சமரச முயற்சிகள் எந்த அளவிற்குப் பலனளிக்கும் என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.