உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதல்; தலைநகரில் அரசு தலைமை செயலகம் தீக்கிரை; குண்டுமழையில் 4 பேர் பலி; பலர் படுகாயம்
கீவ்: ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்தப் போரில் உக்ரைனின் சுமார் 20 சதவீத பகுதிகளை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்துள்ளன. போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மேற்கொண்ட அமைதிப் பேச்சுவார்த்தைகள் இதுவரை எவ்வித முன்னேற்றத்தையும் எட்டவில்லை. இந்தச் சூழலில், போரை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், அதனைப் பாதுகாக்க பிரான்ஸ், பிரிட்டன் தலைமையில் சர்வதேசப் படை ஒன்றை உருவாக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. ரஷ்யா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், உக்ரைன் மீதான தாக்குதல்களை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உக்ரைன் முழுவதும் ரஷ்யப் படைகள் இரவு முழுவதும் கொடூர வான்வழித் தாக்குதல்களை நடத்தின. தலைநகர் கீவ்வில் உள்ள அரசு தலைமைச் செயலகக் கட்டிடம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், அதன் மேற்கூரை மற்றும் மேல் தளங்கள் சேதமடைந்து தீப்பற்றி எரிந்தன. தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடி தீயை அணைத்தனர். இந்தக் கோரத் தாக்குதலில் மட்டும் குறைந்தது 2 பேர் உயிரிழந்தனர், 18 பேர் காயமடைந்தனர். இதேபோல், டினிப்ரோபெட்ரோவ்ஸ்க், சுமி, சபோரிஜியா ஆகிய நகரங்களிலும் ரஷ்யப் படைகள் ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தின. இந்தத் தொடர் தாக்குதல்களில் 9 வயது சிறுமி உட்பட பலர் காயமடைந்தனர். நாடு முழுவதும் நடந்த இந்தத் தாக்குதல்களில் மொத்தமாக 4 பேர் உயிரிழந்ததாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் உக்ரைன் அரசு தெரிவித்துள்ளது.