உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் டிரோன், ஏவுகணை தாக்குதல்: 2 பேர் பலி
கீவ்: உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்து நீடித்து வரும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வர உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோருடன் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். மேலும் போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக துருக்கியின் இஸ்தான்புல் நகரில் 2 சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை.
இதனிடையே உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. அதன்படி கடந்த 4ம் தேதி ஒரே இரவில் உக்ரைன் மீது 550 டிரோன், ஏவுகணைகளை வீசி ரஷ்யா தாக்குதல் நடத்தியது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தாக்குதல் நடத்தப்பட்டது.
தென்மேற்கு உக்ரைனின் செர்னிவ்ட்சி பகுதியில் உள்ள புகோவினா மீது ரஷ்ய படைகள் நடத்திய டிரோன் மற்றும் ஏவுகணை தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். இதேபோல் உக்ரைனின் மேற்கு லிவிவ் பகுதியில் நடத்தப்பட்ட டிரோன் தாக்குதலில் 6 பேர் காயமடைந்தனர். வடகிழக்கு உக்ரைனின் கார்கிவ் நகர் மீது 8 டிரோன்கள், 2 ஏவுகணைகள் தாக்கியதில் 3 பேர் காயமடைந்தனர்.