உக்ரைன் நாடாளுமன்ற மாஜி சபாநாயகர் சுட்டு கொலை
கீவ்: உக்ரைன் நாடாளுமன்ற முன்னாள் சபாநாயகர் ஆண்ட்ரீ பாருபி சுட்டு கொல்லப்பட்டார். ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால் ரஷ்ய அதிபர் புடின், உக்ரைன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. உக்ரைன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. 3 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் இந்தப் போரை நிறுத்துவதற்கு இரு நாடுகளுமே தயாராக இல்லை என்ற சூழல்தான் நிலவுகிறது. அண்மையில் உக்ரைனின் ஒடெசாவுக்கு உட்பட்ட கடற்பகுதியில் நங்கூரமிட்ட போர்க்கப்பலை ரஷ்யா டிரோன் மூலம் தகர்த்தது.
தலைநகர் கீவில் குடியிருப்பு பகுதிகளைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இதனால் மக்கள் மெட்ரோ ரயில் நிலையங்களில் தஞ்சமடைந்துள்ளனர். இந்த நிலையில், உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ் நகரில் நேற்று முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பாருபி சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். இது ஒரு கொடூரமான கொலை என்று அதிபர் ஜெலென்ஸ்கி கண்டனம் தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர் குண்டு மழையில் சுட்டு கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். பாருபியை சுட்டு கொன்றவர் அங்கிருந்து தப்பியோடி விட்டார். உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி இது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.