உக்ரைன் - ரஷ்ய போர் நிறுத்தம்; உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு!
அமைதி பேச்சுவார்த்தை நடத்த மாஸ்கோவுக்கு வருமாறு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கிக்கு ரஷ்ய அதிபர் புதின் அழைப்பு விடுத்துள்ளார். ஜெலென்ஸ்கிக்கு 100% பாதுகாப்பு வழங்கப்படும் எனவும் உறுதி அளித்துள்ளார். உக்ரைன் மீது, கடந்த 2022ல் ரஷியா தொடர்ந்த போர், தற்போது வரை நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்துவதற்கான முயற்சிகள் நடந்து வரும் நிலையில், செய்தியாளர்களை சந்தித்து பேசிய ரஷிய அதிபர் புதின் கூறியதாவது: பொதுவான புரிதல் மேலோங்கினால், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்றுக் கொள்ளக்கூடிய தீர்வுக்கு வாய்ப்பு உள்ளது.
துாதரக உறவுகள் மூலமான தீர்வையே ரஷியா விரும்புகிறது. ஜெலென்ஸ்கிக்கு 100% பாதுகாப்பு வழங்கப்படும்.ஜெலன்ஸ்கியுடன் பேச்சு நடத்த ரஷியா தயாராக இருக்கிறது. ஆனால், ஜெலன்ஸ்கி மாஸ்கோ வந்தால் மட்டுமே இது சாத்தியப்படும் என்றார். ஜெலன்ஸ்கியை மாஸ்கோவில் மட்டுமே சந்திக்க வாய்ப்புள்ளதாக ரஷியா அதிபர் புதின் தெரிவித்துள்ள கருத்தை, உக்ரைன் ஏற்க மறுத்துவிட்டது. புதினின் முன்மொழிவுகள் ஒரு நயவஞ்சகமான தந்திரம் என்று உக்ரைனின் வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.