யுஜிசியை கலைக்கும் உயர்கல்வி ஆணைய மசோதா இந்தியில் பெயர் மாற்றம்: நாடாளுமன்றத்தில் விரைவில் தாக்கல்
புதுடெல்லி: உயர்கல்வி நிறுவனங்களுக்கான ஒற்றை ஒழுங்குமுறை அமைப்பை உருவாக்கும் உயர்கல்வி ஆணைய மசோதாவுக்கு இந்தியில் புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது. புதிய தேசிய கல்விக் கொள்கையின் பரிந்துரைப்படி, பல்கலைக்கழக மானிய குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) மற்றும் தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் (என்சிடிஇ) ஆகியவை கலைக்கப்பட்டு, அவை அனைத்தும் ஒற்றை உயர்கல்வி ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்பட உள்ளது.
இதன் மூலம் கலை, அறிவியல் பல்கலைக்கழகங்கள், பொறியியல், தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், ஆசிரியர் பயிற்சி பல்கலைக்கழகங்கள் ஒரே ஆணையத்தின் கீழ் கொண்டு வரப்படும். இதற்காக, இந்திய உயர்கல்வி ஆணையம் மசோதா கொண்டு வரப்பட்டது.
இந்நிலையில் இந்த மசோதா தற்போது விக்சித் பாரத் சிக்ஷா அதிக்ஷன் மசோதா என இந்தியில் பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து வரும் வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. ஒன்றிய பாஜ அரசு தொடர்ச்சியாக பல மசோதாக்களுக்கு இந்தியில் பெயர் சூட்டி வருவது குறிப்பிடத்தக்கது.