உடுமலையில் உதவி ஆய்வாளரை வெட்டிக் கொன்றவர் போலீஸ் என்கவுன்டரில் உயிரிழப்பு : நடந்தது என்ன?
உடுமலை: உடுமலையில் விசாரணைக்காக சென்ற சிறப்பு உதவி ஆய்வாளர் படுகொலை சம்பவத்தில் தொடர்புடைய மணிகண்டன் என்பவர் போலீஸ் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த குடிமங்கலம் அருகே சிக்கனூத்து பகுதியில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான தோட்டத்தில் வேலை செய்யும் மூர்த்தியும் அவரது மகன்களான தங்கபாண்டியன், மணிகண்டன் ஆகிய 3 பேரும் நேற்று இரவு மதுபோதையில் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.இதில் தங்கபாண்டி தனது தந்தை மூர்த்தியை கடுமையாக தாக்கியுள்ளார். இந்த தகவல் அறிந்து அங்கு சென்ற எஸ்.எஸ்.ஐ சண்முகவேல், அவர்களை சமாதானப்படுத்தி, காயமடைந்த மூர்த்தியை ஆம்புலன்சில் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்துள்ளார்.
அப்போது பதுங்கி இருந்த மூர்த்தியின் மகன் மணிகண்டன், எஸ்.எஸ்.ஐ., சண்முகவேலுவை பாய்ந்து வந்து தாக்கியதில் நிலைதடுமாறி கீழே விழுந்ததும், அங்கிருந்த மூர்த்தி, தங்கபாண்டி, மணிகண்டன் மூன்று பேரும் சேர்ந்து சண்முகவேலுவை சரமாரியாக வெட்டிக் கொன்றனர். இந்த நிலையில், தந்தை மூர்த்தி, மகன் தங்கப்பாண்டி காவல்நிலையத்தில் சரண் அடைந்த நிலையில், மணிகண்டனை 6 தனிப்படைகள் தேடி வந்தனர். அப்போது, மணிகண்டன் அடிக்கடி அடர் வனப்பகுதியில் தங்குவார் என உறவினர்களிடம் நடத்திய விசாரணையில் துப்பு கொடுத்துள்ளனர்.
இதையடுத்து, கொலை செய்யப்பட்ட இடத்திற்கு அருகிலேயே மறைந்து கொண்டு செல்போனை மணிகண்டன் பயன்படுத்தியதாக தெரிகிறது. இதன் அடிப்படையில், உடுமலை அருகே உப்பாறு ஓடை பகுதியில் ஆய்வாளர் திருஞான சம்பந்தம் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு மணிகண்டனை சுற்றி வளைத்தனர். மணிகண்டனை கைது செய்ய முயன்ற போது, எஸ்.எஸ்.ஐ. சண்முகவேலை வெட்டிய அதே ஆயுதத்தால் காவலர் சரவணக்குமாரை மணிகண்டன் தாக்கி உள்ளார். அப்போது, தற்காப்பிற்காக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதில் மணிகண்டனுக்கு தலைப்பகுதியில் குண்டு பாய்ந்தது. இதையடுத்து. மணிகண்டனின் உடல் திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது.