உடுமலையில் சிறுத்தை பல் வைத்திருந்ததாக பிடிபட்டார் வனத்துறை விசாரணைக்கு சென்றவர் அலுவலக கழிவறையில் தற்கொலை: மலைவாழ் மக்கள் போராட்டம்
இதையடுத்து வனத்துறை அலுவலகத்தில் உள்ள கழிவறைக்கு வனஊழியர்கள் மாரிமுத்துவை அனுப்பி வைத்தனர். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் சந்தேகமடைந்த ஊழியர்கள் கதவை தட்டி உள்ளனர். ஆனால் எவ்வித சத்தமும் இல்லாததால் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது மாரிமுத்து தனது லுங்கியால் தூக்கிட்டு பிணமாக தொங்கியது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக உடுமலை போலீசாருக்கு வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து அவரது மனைவி பாண்டியம்மாள் (40), மகள்கள் சிந்து (28), ராதிகா (25) உள்ளிட்ட குடும்பத்தினர் மற்றும் மலைவாழ் மக்கள் வனச்சரக அலுவலகம் முன் நேற்று காலை குவிந்தனர். மாரிமுத்து சாவில் சந்தேகம் உள்ளதாகவும், உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும் தூக்கில் தொங்கும் மாரிமுத்துவின் சடலத்தை பத்திரிகையாளர்கள் மற்றும் குடும்பத்தினர் முன்னிலையில் கீழே இறக்க வேண்டும். இல்லாவிட்டால் உடலை அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்ல அனுமதிக்க மாட்டோம் என்று மலைவாழ் மக்கள் சங்க தலைவர் செல்வம் போலீசாருக்கு கோரிக்கை விடுத்தார்.
ஆனால் இதனை போலீசார் ஏற்கவில்லை. இதையடுத்து ஆவேசம் அடைந்த மலைவாழ் மக்களும், மாரிமுத்துவின் குடும்பத்தினரும் வனச்சரகம் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அதிகாரிகள் தரப்பில் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், பிரேத பரிசோதனை, மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடைபெறும் என்றும் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்றும் அதிகாரிகள், போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, மலைவாழ் மக்கள் போராட்டத்தை கைவிட்டு, உடலை எடுத்துச்செல்ல அனுமதித்தனர். மாரிமுத்துவின் உடல் திருப்பூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவத்தால் உடுமலையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
* அடித்து துன்புறுத்தியதால் சாவு
மலைவாழ் மக்கள் சங்க தலைவர் செல்வம் கூறுகையில், “மாரிமுத்து தற்கொலை செய்து கொண்டதாக பொய் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விசாரணை என்ற பெயரில் அடித்து துன்புறுத்தியதால் அவர் இறந்துள்ளார். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்” என்றார்.