உடுமலை அருகே அதிமுக எம்எல்ஏ தோட்டத்தில் எஸ்எஸ்ஐயை வெட்டிக்கொன்றவர் என்கவுன்டரில் சுட்டுக்கொலை: எஸ்ஐயை வெட்டிவிட்டு தப்ப முயன்றதால் அதிரடி; போலீசாரிடம் மாஜிஸ்திரேட் விசாரணை
உடுமலை: உடுமலை அருகே அதிமுக எம்எல்ஏவின் தோட்டத்தில் எஸ்எஸ்ஐ சண்முகவேலுவை வெட்டிக்கொலை செய்த கொலையாளி, எஸ்ஐயை வெட்டி தப்ப முயன்றதால் என்கவுன்டரில் சுட்டுக்கொல்லப்பட்டார். திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள சிக்கனூத்து கிராமத்தில் மடத்துக்குளம் அதிமுக எம்எல்ஏ மகேந்திரனுக்கு சொந்தமான 40 ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளது. இங்கு திண்டுக்கல் வேடச்சந்தூரை சேர்ந்த மூர்த்தி (62), மனைவி பாண்டியம்மாள், மகன் தங்கப்பாண்டி (30), மருமகள் புனிதா மற்றும் பேரக்குழந்தைகளுடன் தோட்டத்து சாலையில் தங்கி பணிபுரிந்து வந்தார்.
கடந்த 5ம் தேதி இவரது மூத்த மகன் மணிகண்டன் (32), தனது மனைவி சபீனா, மகளுடன் அங்கு வந்தார். அன்று இரவு தந்தை மற்றும் 2 மகன்களும் சேர்ந்து மது அருந்தி உள்ளனர். போதையில் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் மணிகண்டன் தனது தந்தையை தாக்கி உள்ளார். இதுகுறித்து புகாரின்பேரில் விசாரிக்க சென்ற குடிமங்கலம் எஸ்எஸ்ஐ சண்முகவேலை (57) மணிகண்டன் வெட்டிக் கொலை செய்தார். இதையடுத்து, தந்தை,மகன்கள் இருவரும் அங்கிருந்து தப்பினர். அவர்களை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
நேற்று முன்தினம் மாலை மூர்த்தி, தங்கப்பாண்டி ஆகியோர் போலீசில் சரணடைந்தனர். தொடர் தேடுதல் வேட்டையில் நேற்று முன்தினம் இரவே கொலையாளி மணிகண்டனும் போலீஸ் பிடியில் சிக்கினார். இதையடுத்து 3 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் கொலைக்கு பயன்படுத்திய அரிவாளை கண்டெடுக்க மணிகண்டனை குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம், எஸ்ஐ சரவணக்குமார் மற்றும் போலீசார் நேற்று அதிகாலை சிக்கனூத்துக்கு அழைத்துச் சென்றனர்.
தென்னந்தோப்பிற்கு ஒரு கி.மீ. முன்பாக உப்பாறு ஓடை அருகே வந்த நிலையில், அங்கு ஏற்கனவே மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்த மணிகண்டன், திடீரென்று எஸ்ஐ சரவணக்குமாரின் வலது கையில் வெட்டிவிட்டு தப்பியோட முயன்றார். தொடர்ந்து மற்ற போலீசாரையும் வெட்ட அரிவாளை சுழற்றினார். அப்போது தற்காப்புக்காக மணிகண்டனை குடிமங்கலம் இன்ஸ்பெக்டர் திருஞானசம்பந்தம் துப்பாக்கியால் சுட்டதில் அவரது நெற்றியில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காயமடைந்த எஸ்ஐ சரவணகுமார் உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அவரை நேரில் சந்தித்து ஐஜி செந்தில்குமார் நலம் விசாரித்தார். என்கவுன்டர் செய்யப்பட்ட மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. நேற்று மாலை மணிகண்டனின் தாயார் பாண்டியம்மாள், மனைவி சபீனா மற்றும் கைது செய்யப்பட்டுள்ள தங்கபாண்டி மனைவி புனிதா ஆகியோர் சடலத்தை அடையாளம் காட்டினர். இதையடுத்து உடுமலை ஜேஎம் 2 மாஜிஸ்திரேட் உமாதேவி சம்பவம் குறித்து போலீசாரிடம் விசாரணை நடத்தியதோடு மணிகண்டனின் உடலில் குண்டு பாய்ந்த இடத்தையும் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து மருத்துவக்குழுவினர் பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் குடும்பத்தினரிடம் மணிகண்டனின் சடலத்தை ஒப்படைத்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட மூர்த்தி, தங்கப்பாண்டி ஆகியோர் உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.
* தற்காப்புக்காக துப்பாக்கிச்சூடு ஐஜி விளக்கம்
மேற்கு மண்டல ஐ.ஜி. செந்தில்குமார் கூறியதாவது: கொலை குற்றவாளியான மணிகண்டன், தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை காண்பிப்பதாக கூறியதன் அடிப்படையில் காவல்துறை விசாரணை அதிகாரிகள், அவரை உடுமலை உப்பாறு ஓடை பகுதிக்கு அழைத்து சென்றனர். அப்போது, மறைவிடத்தில் இருந்து அரிவாளை எடுத்த மணிகண்டன், அதை காவல்துறை அதிகாரிகளிடம் கொடுப்பதற்கு பதிலாக, அவர்களை நோக்கி வெட்ட பாய்ந்தார். இதை போலீசார் தடுத்தனர். ஆனாலும், அதை மீறி அவர் எஸ்ஐ சரவணக்குமாரை வெட்டியுள்ளார். இதில் அவரது வலது கையில் வெட்டு விழுந்துள்ளது. அப்போது, உடன் வந்த காவல் அதிகாரி ஒருவர் தற்காப்புக்காக துப்பாக்கியால் சுட்டபோது மணிகண்டன் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. விரைவில் இது தொடர்பாக முழு விளக்கம் அளிக்கப்படும். இவ்வாறு ஐஜி செந்தில்குமார் கூறினார்.
* மணிகண்டன் மீது 5 வழக்குகள் நிலுவை
போலீசாரால் என்கவுண்டர் செய்ததில் உயிரிழந்த மணிகண்டன் மீது வடமதுரை போலீஸ் நிலையத்தில் திருட்டு வழக்கும், எரியோடு போலீஸ் நிலையத்தில் மிரட்டி பணம் பறித்தல் வழக்கும், கொலை மிரட்டல் வழக்கும், தேவதானப்பட்டி போலீஸ் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும், அதிவேகமாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தி கொடுங்காயம் ஏற்படுத்துதல் வழக்கும் உள்ளது. இதேபோல், தந்தை மூர்த்தி மீது 2 வழக்குகளும், தங்க பாண்டியன் மீது 3 வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
* தந்தை, மகன் கதறல்
எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட தந்தை மூர்த்தி, மகன் தங்கபாண்டியன் இருவரும் நேற்று மாலை உடுமலை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின் வெளியே அழைத்து வரப்பட்டனர். அப்போது அவர்கள் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘என் பையனை கொன்னுட்டாங்க....எங்க உயிருக்கு ஆபத்துனா எஸ்கார்டு கொண்டு போறவங்க தான் பொறுப்பு. காலையில எங்க அண்ணனை உயிரோட காமிச்சாங்க. அப்புறம் கொன்னுட்டாங்க, எங்க உயிருக்கு ஆபத்துனா எஸ்கார்டு கூட்டிட்டு போற போலீஸ் தான் காரணம். கண்ணை கட்டி கூட்டி போய் கொல்ல நாங்க தான் கிடைச்சோமா’ என்றனர்.
* 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு
எஸ்எஸ்ஐ சண்முகவேல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மூர்த்தி, தங்கபாண்டியன், என்கவுன்டர் செய்யப்பட்ட மணிகண்டன் ஆகியோர் மீது கொலை, கொலை முயற்சி, அரசு வாகனத்தை சேதப்படுத்துதல், அரசு ஊழியரை தாக்கி காயம் ஏற்படுத்துதல், அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் (307, 296 B, 121, 132, 103/1, 105(3), 351(3), 3(1) ஆகிய 8 பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.